நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளில் திரட்டிய கடன் 2,517 கோடி டாலர்

இந்திய நிறுவனங்கள், நடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் (2019 ஏப்ரல்-செப்டம்பர்) வெளிநாடுகளில் 2,517 கோடி டாலர் வணிக கடன் திரட்டி உள்ளன.

Update: 2019-11-14 11:20 GMT
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மும்பை

விரிவாக்க நடவடிக்கைகள்

பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தமது விரிவாக்க நடவடிக்கைக்கு தேவையான நிதியை பல்வேறு வழிமுறைகளில் திரட்டுகின்றன. இதில் வெளிநாடுகளில் பங்குகள், கடன்பத்திரங்கள் விற்பனை மூலம் நிதி திரட்டுவதும் முக்கிய வழிமுறையாக இருக்கின்றன. இவ்வாறு திரட்டும் நிதியை நிறுவனங்கள் தமது வளர்ச்சித் திட்டங்கள், நடைமுறை மூலதன தேவை, பழைய கடன்களை திரும்ப செலுத்துவது மற்றும் சில பொது நோக்கங்களுக்காக பயன்படுத்துகின்றன.

பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற்றும், அங்கீகரிக்கப்பட்ட வழிமுறையிலும் வெளிநாடுகளில் கடன் திரட்டப்படுகிறது. இதில் வணிக கடன், அன்னிய செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன்பத்திரங்கள் (எப்.சி.சி.பீ) மற்றும் ரூபாய் மதிப்பு கடன்பத்திரங்கள் வெளியீடு ஆகிய வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

நடப்பு ஆண்டில், செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 6 மாதங்களில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் வணிக கடன் மற்றும் எப்.சி.சி.பீ. மூலம் திரட்டிய நிதி 2,517 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆண் டின் இதே காலத்தை விட இது 53 சதவீதம் அதிக மாகும். அப்போது திரட்டிய கடன் 1,648 கோடி டாலராக இருந்தது.

கடந்த 2018-19-ஆம் நிதி ஆண்டில் நமது நிறுவனங்கள் மொத்தம் 4,200 கோடி டாலரை வெளிநாட்டு வணிகக் கடனாக திரட்டி உள்ளன. முந்தைய ஆண்டில் (2017-18) அது 2,600 கோடி டாலராக இருந்தது. ஆக, திரட்டிய கடன் 62 சதவீதம் உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளில் முதலீடு

இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் கடன் திரட்டுவது போல் முதலீடும் செய்து வருகின்றன. அதாவது பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் வங்கி உத்தரவாதங்கள் வாயிலாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. வெளிநாட்டு கூட்டுத் திட்டங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் செய்திகள்