டாலர் மதிப்பு அடிப்படையில், கச்சா எண்ணெய் இறக்குமதி 32 சதவீதம் குறைந்தது

அக்டோபர் மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் கச்சா எண்ணெய் இறக்குமதி 32 சதவீதம் குறைந்து இருக்கிறது.

Update: 2019-11-26 10:05 GMT
மூன்றாவது இடம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நம் நாடு சவுதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. நாட்டின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்ய வேண்டி இருக்கிறது.

சென்ற நிதி ஆண்டில் (2018-19) கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், வரலாறு காணாத அளவிற்கு, 11,190 கோடி டாலரை எட்டி இருக்கிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 27.15 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 3 சதவீதம் உயர்ந்து 36,697 கோடி டாலராக இருக்கிறது. முந்தைய ஆண்டில் அது 35,692 கோடி டாலராக இருந்தது.

நடப்பு ஆண்டு அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 963 கோடி டாலராக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் அது 1,411 கோடி டாலராக இருந்தது. ஆக, இறக்குமதி 32 சதவீதம் குறைந்துள்ளது. இதே மாதத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 9.19 சதவீதம் குறைந்து (3,057 கோடி டாலரில் இருந்து) 2,776 கோடி டாலராக குறைந்து இருக்கிறது.

நடப்பு 2019-20-ஆம் நிதி ஆண்டில், அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 12 சதவீதம் குறைந்து 3,174 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் அது 8,417 கோடி டாலராக இருந்தது. இதே காலத்தில் எண்ணெய் அல்லாத சரக்குகள் இறக்குமதி 6.93 சதவீதம் குறைந்து 20,674 கோடி டாலராக இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 22,214 கோடி டாலராக இருந்தது.

இறக்குமதியின் பங்கு
2022-ஆம் ஆண்டிற்குள் நமது மொத்த எண்ணெய் தேவையில் இறக்குமதியின் பங்கை 67 சதவீதமாக குறைக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் அடுத்த 3 ஆண்டுகளில் இறக்குமதி தேவையை 67 சதவீதமாக குறைக்க நினைப்பது பெரும் சவாலாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்