28மணிநேரம் 34 நிமிடங்கள் 43 வினாடி; உலகிலேயே மிக ‘நீ...ளமான நாடகம்’ : சென்னை மாணவிகளின் ‘கின்னஸ் சாதனை’

9 மாத பயிற்சி, பேராசிரியர்களின் புதுமுயற்சி, 25 மாணவிகளின் இடைவிடாத நடிப்பு, 250 தன்னார்வலர்களின் உழைப்பு... என எத்திராஜ் கல்லூரி மாணவிகள் நிகழ்த்திக்காட்டிய கின்னஸ் சாதனைக்கு பின்னால் எத்தனையோ விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன.

Update: 2019-12-14 13:24 GMT
கடந்த மார்ச் மாதம், எத்திராஜ் கல்லூரியின் ‘மனித உரிமைகள்’ (humans rights) துறை, 25 மாணவிகளை கொண்டு ‘காலக்கூறு’ என்ற நாடகத்தை நடத்தியது. 28 மணிநேரம், 34 நிமிடங்கள், 43 வினாடிகளுக்கு இரவு-பகலாக தொடர்ந்த அந்த நாடகம், உலகிலேயே மிகப்பெரிய மேடை நாடகம் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருக்கிறது. இவர்களின் ‘ஒரு வரி’ கதையே சுவாரசியமாக இருந்ததால், முழுகதையையும் கேட்டு தெரிந்து கொள்ள சென்னை எழும்பூரில் இருக்கும் எத்திராஜ் கல்லூரிக்குள் நுழைந்தோம். அங்கு மனித உரிமைகள் துறையின் உதவி பேராசிரியை ஷெர்லியை சந்தித்தபோது, மனித உரிமைகள் துறைக்கும், கின்னஸ் சாதனை நாடகத்திற்குமான தொடர்பை விளக்கினார்.

‘‘எத்திராஜ் கல்லூரியில் 2002-ம் ஆண்டு முதல், மனித உரிமைகள் துறை இயங்கி வருகிறது. நான் இங்குதான் மனித உரிமைகளை கற்றுக் கொண்டேன். இன்று இங்கேயே பணியாற்றுகிறேன். மனித உரிமைகளை பற்றி கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர் களுக்கு பல வழிகளில் கற்றுக்கொடுக்கிறோம். அதில் நாடக வடிவமும் ஒன்று. மனித உரிமை சட்டங்களை பற்றி பக்கம் பக்கமாக பேசி புரியவைப்பதற்கும், மேடை நாடகங்களாக நடித்து காட்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. மேடை நாடகங்களை மாணவர்கள் எளிதாக உள்வாங்கி, சட்டத் திட்டங்களையும் சுலபமாக புரிந்து கொள்கிறார்கள். அப்படிதான் எங்களுக்கு மேடை நாடகம், பழக்கமானது. அதேசமயம் ‘பயோஸ்கோப்’ என்ற அமைப்பை வழி நடத்தி வரும் மதன் என்பவர் மூலமாக எங்களுக்கு நீண்ட நாடகத்தை அரங்கேற்றும் எண்ணம் வந்தது. அவர் பல நாடகங்களை வழிநடத்தியவர். நாடகத் துறையில் புதுமைகளை படைக்கும் ஆர்வம் கொண்டவர். அவர்தான், மேடை நாடகத்தின் மூலம் கின்னஸ் சாதனையை படைக்க முடியும் என்று நம்பிக்கையூட்டியவர். அவரது வழிகாட்டுதலில்தான், சாதனை நாடகம் அரங்கேறியது.’’ என்றவர், சாதனை நாடகமான ‘காலக்கூறு’ மையப் படுத்தும் கருத்தை கூறினார்.

‘‘முழுக்க முழுக்க, மனித உரிமை சட்டத்தையே, ‘காலக்கூறு’ நாடகம் விவரிக்கிறது. பெண் உரிமை, பெண் கல்வி, குழந்தைகளுக்கான உரிமைகள், அத்து மீறல்கள், பாலியல் சீண்டல்கள், சைபர் குற்றங்கள், சமூக சீர்கேடுகள்... என மொத்தம் 14 தலைப்புகளில், 14 விதமான மனித உரிமை சட்டங்களையும், அதற்கான தீர்வுகளையும் நாடகமாக நடித்து காண்பிக்க திட்டமிட்டோம். ஆனால் எங்களால் 11 தலைப்புகளை மட்டுமே நடித்து காட்டமுடிந்தது. 14 தலைப்புகளிலும் நாடகத்தை நடத்தி முடித்திருந்தால், 32 மணிநேர நாடகமாக மாறியிருக்கும்.’’ என்றவர், இந்த சாதனை நாடகத்திற்காக உழைத்தவர்களையும் நினைவுகூருகிறார்.

‘‘மனித உரிமைகள் துறையின் 16 மாணவிகளுடன், மற்ற துறை மாணவிகளும் கைக்கோர்த்து, மொத்தம் 25 மாணவிகள் இந்த நாடகத்திற்காக தயாராகினர். இவர்கள்தான், நீண்ட நாடகத்தை, நடித்து காட்டியவர்கள். அதாவது 28 மணிநேரம், 34 நிமிடங்கள் மற்றும் 43 வினாடிகளுக்கு தொடர்ந்து நடித்து கொண்டே இருந்தவர்கள். இவர்கள் மேடையில் சாதனை படைத்துக் கொண்டிருந்த தருணம், நிறைய நல் உள்ளங்கள் மேடைக்கு கீழும் சாதனை படைத்து கொண்டிருந்தார்கள்.

இந்த நாடகத்தின்போது, ஒய்.ஆர்.சி.அமைப்பின் மூலம் 250 தன்னார்வலர்கள் நாடகக்குழுவினருக்கு உதவி செய்தனர். நாடகத்தை காண வருபவர்களுக்கு தகுந்த ஏற்பாடுகளை செய்வது, நாடகக்குழுவினருக்கு தேவையான உதவிகளை செய்வது என இவர்களது, பணி 6 நாட்களாக தொடர்ந்தது. அட, உண்மைதாங்க. சாதனை நாடகம் 28 மணிநேரத்தில் முடிந்துவிட்டது எனில், இவர்களது பணி நாடகத்திற்கு முன்பும், பின்பும் என 6 நாட்கள் தொடர்ந்தது. மேலும் இவர்களோடு, நாடகத்தில் நடிப்பவர்களை கவனித்து கொள்ள 75 மாணவிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதாவது ஒரு நாடக நடிகை மாணவிக்கு, மூன்று உதவியாளர்கள் என்ற வகையில், 75 மாணவிகள் உதவி பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். நாடகத்தில் பங்கேற்கும் மாணவி களின் உடை, அலங்காரம், நாடக வசனம் ஆகியவற்றை தனித்தனியே கவனித்து கொள்வது அவர்களது வேலையாக இருந்தது. இப்படி மாணவிகள் அனைவரும் பிசியாக இருந்த சமயத்தில், உதவி பேராசிரியர்களும் பிசியாகவே இருந்தனர்.’’ என்றவர், அந்த 6 நாட்களும் கல்லூரியிலேயே தங்கி, நாடக பணிகளை கவனித்து கொண்டிருக்கிறார். இவர் மட்டுமின்றி, இவரோடு பவித்ரா, ஷோபா, நித்யா... என பெரிய ஆசிரியர் பட்டாளமும், வீட்டை மறந்து நாடக மேடையில் லயித்திருந்தனர்.

‘‘மாணவிகள், அவர்களின் பெற்றோர், உதவி பேராசிரியைகள்... என நாடக அரங்கமே களைகட்டியிருந்தது. எந்த சிக்கலும் இன்றி நன்றாக தொடங்கிய சாதனை நாடகத்தில், 7 மணிநேரத்திற்கு பிறகு ஒவ்வொரு பிரச்சினையாக வெடிக்க தொடங்கியது. முதலில், கின்னஸ் சாதனை குழுவிற்கு ஆதாரமாக சமர்பிக்க இருந்த ‘ஸ்டாப் வாட்ச்’ கடிகாரம் நின்றுபோனது. அதாவது, நாம் எவ்வளவு நேரம் நாடகத்தை நடத்துகிறோம் என்பதை இந்த ஸ்டாப் வாட்சை கொண்டே அளவிடுவார்கள். இந்த வாட்ச் செயல்பாட்டை நிறுத்தியதும், புது வாட்சை வாங்கி சரிசெய்தோம். அதுவும் செயல்படாமல் போனதும், பதற்றம் தொற்றிக்கொண்டது. நல்ல வேளையாக, கின்னஸ் சாதனையை அங்கீகரிக்கும் நடுவர் ஒருவர் வந்திருந்ததால், நிலைமை சுமுகமானது.

அடுத்ததாக, நாடகத்தில் நடிக்கும் மாணவிகள் சிலர் மயங்கி விழுந்தனர். நீண்ட நாடகம் என்பதும், இடைவெளி இன்றி தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்ததும், மாணவிகளுக்கு உடல் சோர்வை உண்டாக்கியிருந்தது. அதனால் சிலர் மயங்கிவிழுந்தனர். சில மாணவி களுக்கு கால்வலி, உடல் வலி போன்றவை ஏற்பட்டன. இருப்பினும், மாணவிகள் சோர்ந்துவிடாமல், தொடர்ந்து நாடகத்தை நடத்தி கொடுத்தனர். இத்தகைய சிக்கல்கள் இல்லாமல் இருந்திருந்தால், திட்டமிட்டபடி, 32 மணி நேர நாடகத்தை நடத்தி முடித்திருப்போம்’’ என்கிறார், உற்சாகமாக.

‘‘மார்ச் மாதம் நடந்து முடிந்த நாடகத்திற்கு கடந்த வாரம்தான் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சாதனையின் மூலம், இரண்டு விஷயங்களை வெளி உலகிற்கு தெரியப்படுத்தி யிருக்கிறோம். ஒன்று, மனித உரிமைகள் பற்றிய அடிப்படை அறிவு. மற்றொன்று, மனித உரிமை படிப்பினை பிரபலப்படுத்தியது. இவை இரண்டுமே இன்றைய சமூகத்திற்கு தேவையான அம்சங்கள். மனிதனுக்கான அடிப்படை உரிமைகள் என்ன?, பெண்களை எப்படி நடத்துவது?, குழந்தைகளை எப்படி வழிநடத்துவது?, எதை கற்றுக்கொடுக்கவேண்டும், எதை தவிர்க்கவேண்டும்?, மனித உரிமை சட்டத்திட்டங்கள் என்ன?, அவை எங்கு, எப்போது மீறப்படுகிறது போன்ற பல விஷயங்களை நாடகத்தின் மூலம் பொதுமக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறோம். அதேசமயம், இந்த கின்னஸ் சாதனையின் மூலம் மனித உரிமைகள் என்ற துறை இருப்பதும், அதில் மனித உரிமை சட்டத்திட்டங்கள் கற்றுக் கொடுப்பதையும் வெளியுலகிற்கு சத்தமாக அறிக்கையிட முடிந்தது’’ என்றவர், மாணவிகளின் துணையோடு, மனித உரிமை சட்டத்திட்டம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடத்தி வருகிறார். எதிர்காலத்தில், இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்துவது இவர்களது எதிர்கால திட்டமாக இருக்கிறது. அதை நோக்கி, இந்த சாதனை நாடக குழுவினர் பயணிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்