பாரம்பரியச் சின்னங்கள் : தண்ணீர் நகரம் வெனிஸ்

சாலைகளுக்குப் பதிலாக கால்வாய்களையே போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் தண்ணீர் நகரம் வெனிஸ். இத்தாலியில் உள்ள அட்ரியாட்டிக் கடல் ஒட்டிய பகுதியில் காணப்படும் 120 தீவுக்கூட்டங்களின் சேர்க்கையே வெனிஸ் நகரமாகும்.

Update: 2020-01-24 12:25 GMT
இத்தாலியின் பெரிய துறைமுக நகரமாகவும் இது விளங்குகிறது. உலகின் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.

பரந்த நீர்ப்பரப்புதான் இத்தாலியில் இருந்து இந்த நகரத்தை பிரித்துள்ளது. தீவுகளை நாட்டின் முதன்மைப் பகுதியுடன் இணைக்கும் சில இடங்களில் சாலைகள் உள்ளன. மற்ற பெரும்பாலான இடங்களில் நீர்ப்போக்குவரத்துதான். 400க்கும் மேற்பட்ட குறுக்குப் பாலங்கள், 1500 வினோத கால்வாய்கள் இங்கு காணப்படுகின்றன.

இங்குள்ள கட்டுமானங்கள் பலவும் மரப்பலகைகள் மேல் எழுப்பப்பட்டவைதான். நெருக்கமாக இணைக்கப்பட்ட பலகைகள் மீது செங்கல் மற்றும் கற்களைக் கொண்டு கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளது. மணல் - களிமண் கலவை அவற்றை இணைக்கின்றன. சில கட்டிடங்கள் 600 ஆண்டுகளுக்கு மேல்பழமையானவை.

பழங்காலத்தில் வெனிசிய மக்கள் படகுகள், தோணி களையே போக்குவரத்திற்குப் பயன்படுத்தினர். ஒற்றை துடுப்புகளைக் கொண்டு அவற்றை நீரில் செலுத்தினர். தற்போது தோணிகள் சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு வாகனமாக இருக்கிறது. திருமணம், இறுதிச்சடங்கு ஊர் வலம் போன்றவற்றுக்காகவும் தோணிகளை பயன்படுத்து கிறார்கள்.

மோட்டார் மூலம் இயங்கும் கப்பல்போன்ற தோற்றம்கொண்ட தண்ணீர் பஸ்களே துரித போக்குவரத்து வாகனமாக விளங்குகின்றன. இவற்றை வேபரெட்டோஸ் என்றும், வாட்டர் பஸ் என்றும் அழைக்கிறார்கள். இவையே தண்ணீரில் வேகமாக செல்ல உதவுகின்றன.

கிராண்ட் கானல் எனும் முதன்மைக் கால்வாய் மிகப்பெரியதாகும். இங்கு கால்வாயின் இருபுறமும் 12 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பளிங்கு மற்றும் கல் மாளிகைகள் உள்ளன. வெனிஸ் நகர பாலங்களில் புகழ்பெற்றவை ரியால்டோ மற்றும் பிரிட்ஜ் ஆப் ஸை. இவை கிராண்ட் கானல் கால்வாயில்தான் உள்ளன.

டோஜெஸ் மாளிகையையும், சிறைக்கூடத்தையும் இணைக்கும் விதமாக இந்த பாலம் 16-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டது. ஸை (SIGH) பாலம், கைதிகளை நடத்தி கூட்டிச் செல்ல பயன்பட்டதாகும். இதற்கு பெருமூச்சு என்று பொருளாகும். கைதிகள் சிறை தண்டனை பெற்று செல்லும்போது கடைசியாக நகரத்தை அந்த பாலத்தில் இருந்து பார்வையிட அனுமதிக்கப் படுவார்கள். கடும் தண்டனையால் வெளியே வர முடியாமல் அவர்கள் ஏக்கப்பெருமூச்சுடன் பார்வையிடுவதை குறிக்கும் பொருட்டு இந்த பாலத்திற்கு அந்தப் பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த பகுதியில் செயின்ட் மார்க் சதுக்கம் உள்ளது. இது கடற்கரை விருந்தினர் விடுதியாகும். இங்கு விலைமதிப்பற்ற ஓவியங்கள் பல பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை அந்த நகரத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய ஒன்றாக விளங்குகிறது.

வெனிஸ் நகரம் மற்றும் அதன் தோணி போக்குவரத்து 1987-ல், உலகின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப் பட்டது.

மேலும் செய்திகள்