செயில் நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்

செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Update: 2020-02-12 09:19 GMT
புதுடெல்லி

செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

விற்பனை இலக்கு

நிதிப்பற்றாக்குறையை எதிர்கொள்ள மத்திய அரசு கையாளும் முக்கிய வழிமுறைகளில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் ஒன்றாகும். நடப்பு நிதி ஆண்டில் இந்த வழிமுறையில் ரூ.1.05 லட்சம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், சந்தை நிலவரங்கள் சரியில்லாததால் இந்த இலக்கு ரூ.65,000 கோடியாக குறைக் கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டில் இதுவரை பங்குகள் விற்பனை மூலம் மத்திய அரசு திரட்டி இருக் கும் நிதி ரூ.34,000 கோடியாகும். ஆக, புதிய இலக்கை எட்ட வேண்டுமானால் மார்ச் மாதத்திற்குள் ரூ.31,000 கோடி திரட்டப்பட வேண்டும். அடுத்த நிதி ஆண்டில் (2020-21) அரசுப் பங்குகள் விற்பனை இலக்கு ரூ.2.10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், செயில் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.1,000 கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முன் 2014 டிசம்பரில் அதன் 5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது இந்நிறுவனத்தின் மத்திய அரசுக்கு 75 சதவீத பங்குகள் இருக் கின்றன.

செயில் நிறுவனம், கடந்த நிதி ஆண்டில் (2018-19) 1.63 கோடி டன் கச்சா உருக்கை உற்பத்தி செய்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அது 8 சதவீத வளர்ச்சியாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில் (2019-20) இந்நிறுவனம் தனது கச்சா உருக்கு உற்பத்தியை 1.75 கோடி டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

பங்கு விலை

மும்பை பங்குச்சந்தையில், செவ்வாய்க்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது செயில் நிறுவனப் பங்கு ரூ.46.50-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.47.30-க்கும், குறைந்தபட்சமாக ரூ.45.50-க்கும் சென்ற இப்பங்கு இறுதியில் ரூ.45.70-ல் நிலைகொண்டது. இது, முந்தைய நாள் இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.65 சதவீத இறக்கமாகும்.

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

மேலும் செய்திகள்