பாரம்பரியச் சின்னங்கள் : சிற்ப நகரம் மாமல்லபுரம்

சென்னையில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மாமல்லபுரம் எனப்படும் மகாபலிபுரம். இது பல்லவர்களின் முதன்மை துறைமுக நகரமாகவும், இரண்டாவது தலைநகரமாகவும் விளங்கிய பழம் பெருமை மிக்க நகரமாகும்.

Update: 2020-02-14 10:20 GMT
 பல்லவர்கள் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட பேரரசர்களாவர். 4-ம் நூற்றாண்டு முதல் 8-ம் நூற்றாண்டு வரை இவர்கள் இங்கு ஆட்சி புரிந்தனர்.

பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முதலாம் நரசிம்ம வர்மன் மற்றும் இரண்டாம் நரசிம்ம வர்மன் ஆகியோராவர். இவர்கள் கி.பி. 630 முதல் 728 வரை ஆட்சி செய்தனர்.

இவர்கள் காலத்தில் பல்வேறு அழகிய ஆலயங்கள் மாமல்லபுரத்தில் எழுப்பப்பட்டன. இந்த கோவில்கள் தென்னிந்தியாவை ஆண்ட மற்றொரு அரச வம்சத்தினரான சோழர்களின் கட்டிடக்கலை பாணியில் அமைந்திருந்தது.

கடற்கரை கோவில், ஒற்றைக்கல் ரதங்கள் அல்லது ரத கோவில்கள் எனப்படும் சிற்பங்கள் அனைத்தும் பல்லவர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன. அர்ச்சுனன் தபசு எனப்படும் பெரும்பாறை புடைப்புச் சிற்பங்களும் குறிப்பிடத்தக்கதாகும்.

அர்ச்சுனன், சிவபெருமானை வேண்டி கங்கையை பூமிக்கு கொண்டு வந்தாராம். அந்த தவக் காட்சியை சித்தரிப்பதாக சிற்பங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இது 6 மீட்டர் உயரத்திற்கு 24 மீட்டர் நீளம் வரை சிற்பங்களாக வடிக்கப்பட்டு உள்ளன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட உருவங்கள் உள்ளன. தேவர்கள், மனிதர்கள், விலங்குகள் என பல உருவங்கள் இதில் சிற்பங்களாக்கப்பட்டு உள்ளன. மேலே இருந்து தண்ணீர் விடுவிக்கப்படுவது போன்ற சிற்பம், கங்கை விடுவிக்கப்படுவதை குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இந்த அர்ச்சுனன் தபசுப் பாறையின் தெற்கே 5 ரதங்களின் ஆலயம் உள்ளது. பெரிய ஒற்றைப் பாறையில் 4 பேர் சேர்ந்து இந்த ரதங்களையும், கோவில் சிற்பத்தையும் செதுக்கியதாக கருதப்படுகிறது. இந்த 5 ரதங்கள் பஞ்சபாண்டவ இளவரசர்களான அர்ச்சுனன், பீமன், தர்மராஜா, நகுலன், சகாதேவன் ஆகியோருடைய தேர் ரதங்கள் எனப்படுகிறது. கடற்கரை கோவில் சிவபெருமானை போற்றுவதற்காக எழுப்பப்பட்டதாக கருதப்படுகிறது. இது கருங்கற்களால் எழுப்பப்பட்டது என்றாலும் ஒரே கல்லால் ஆனதல்ல. இதுதான் தென்னிந்தியாவில் எழுப்பப்பட்ட கற்கோவில்களின் மிகப்பழமையான முன்னோடி கோவில் என்றும் நம்பப்படுகிறது.

மாமல்லபுரம் உலக புராதன சின்னபகுதியாக 1984-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்