ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? கரையும் கையிருப்பு... ஏங்க வைக்கும் எதிர்பார்ப்பு

ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் மக்களின் கையிருப்பு வேகமாக கரைந்து வருகிறது.

Update: 2020-04-09 01:20 GMT
இன்றைக்கு உலகத்தை மிரட்டி கொண்டிருக்கும் ஒரு கொடிய வைரஸ் நோய். ஒட்டுமொத்த மக்களையும் வீட்டிற்குள் முடக்கி வைத்திருக்கிறது. கண்ணுக்கு தெரிந்த எதிரியைவிட கண்ணுக்கு தெரியாத கொரோனாவை எதிர்கொள்வது தான் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதற்கு தனித்து இருப்பதுதான் மிகப்பெரிய தீர்வு.

ஏனென்றால் இதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஊரடங்கு சட்டம் காரணமாக கடந்த 15 நாட்களாக மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ள சூழ்நிலையில் அவர்களின் கையிருப்பும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது. மளிகை காய்கறி கடைகள் தவிர மற்ற தொழில்கள் முடங்கி போய் விட்டது.

கொரோனா பாதிப்பு எப்போது தீரும், ஊரடங்கு சட்டம் எப்போது தளர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்புதான் மக்கள் மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 80 சதவீதம் பேர் வறுமை கோட்டிற்குள் உள்ள தொழிலாளர்கள்தான்.

இதில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கூலித் தொழிலாளிகள் தினமும் உழைத்தால் தான் சோறு என்ற நிலையில் தான் அவர்களின் நிலை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கையை கொரோனா புரட்டிப் போட்டிருக்கிறது.

வங்கிகள் மூன்று மாதத்திற்கு கடன் மற்றும் வட்டி வசூலிக்க கூடாது என்று சொல்லப்பட்ட போதிலும் பல வங்கிகள் இந்த மாத தவணையை ஏற்கனவே பிடித்துவிட்டன. அரசின் உதவிகள் ஓரளவுக்கு மக்களுக்கு கிடைத்தாலும் வாழ்வாதாரத்தை ஓட்டுவதில் அவர்களுக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

பொழுதைப் போக்குவதற்கு இணையதளங்கள் பழமையான விளையாட்டுக்கள் இருந்த போதிலும் மனதின் ஓரத்தில் கவலை மட்டும் அகலாமல் இருந்தே வருகிறது.

ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்படுமா? முடிவுக்கு வருமா? என்ற கேள்விக்கு விடை கிடைக்காமலேயே ஒவ்வொரு நாளும் வாழ்வாதார கேள்விகளுடன் விவசாயிகள், தொழிலாளர்கள் பலதரப்பட்ட மக்கள் மனச்சுமையை சுமந்தபடி வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்