கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதி-கருத்துக்கணிப்பில் அம்பலம்

கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் புதிய பாதிப்புகளால் அவதியுறுவது ஒரு கருத்துக்கணிப்பில் அம்பலமாகி உள்ளது.

Update: 2020-07-05 06:14 GMT
லக்னோ,

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பிரிவினராக இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் ஊரடங்கால் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள அவர்களின் நிலை இன்னும் பரிதாபமாகத்தான் உள்ளது. இது குறித்து ‘ஹியூமன் லிபர்ட்டி நெட்வொர்க்’ என்ற தொண்டு அமைப்பு ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.

30 லட்சம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் திரும்பியுள்ள உத்தரபிரதேசத்திலும், 30 லட்சம் பேர் சொந்த ஊர் திரும்பியுள்ள பீகாரிலும் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய பாதிப்புகள் அம்பலத்துக்கு வந்துள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், வாழ்வாதாரம், சுகாதார சேவைகளுக்கான வாய்ப்பு, ஊட்டச்சத்து, அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது மிகப்பெரிய சவால்களாக உருவெடுத்துள்ளன.

* கடன் கொத்தடிமைதனத்தால் ஆட்கடத்தல் என்னும் சவாலும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

*உத்தரபிரதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் மே மாதத்தில் 23.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை திட்டத்தில் வேலை கோருவோர் அளவு 307 சதவீதம் அதிகரித்துள்ளது.

* பீகார், உத்தரபிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அரசு திட்டங்களை இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடுவதில் முக்கிய தடைகள் உள்ளன. இதனால் பெண்கள் தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது கடன் கொத்தடிமைதனத்துக்கும், ஆட்கடத்தலுக்கும் காரணமாகிறது.

*பெண்கள், குழந்தைகள் ஊட்டசத்து பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். இது அவர்களுக்கு ரத்த சோகையை ஏற்படுத்துகிறது. உத்தரபிரதேசத்தில் சந்தாலி மாவட்டத்தில் குழந்தைகள் 66.4 சதவீதத்தினரும், பெண்கள் 55.4 சதவீதத்தினரும், அசாம்காரில் குழந்தைகள் 61.8 சதவீதத்தினரும், பெண்கள் 61.7 சதவீதத்தினரும், பீகாரில் கிருஷ்ணகாஞ்சில் குழந்தைகள் 65.2 சதவீதத்தினரும், பெண்கள் 62 சதவீதத்தினரும், பூர்ணியாவில் குழந்தைகள் 66.5 சதவீதத்தினரும், பெண்கள் 72.2 சதவீதத்தினரும் ரத்த சோகைக்கு ஆளாகி உள்ளனர்.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழான நன்மைகள் உத்தரபிரதேசத்தில் பதோகியில் 57, பிரயாக்ராஜில் 44, பீகாரில் கட்டிஹாரில் 57, சஹர்சாவில் 58 சதவீதத்தினருக்கு கிடைக்கவில்லை. அவர்கள் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

*பீகாரில் 29 சதவீத மக்களுக்கு வேலை அட்டை உள்ளது. சஹர்சா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச் மாவட்டங்களில் வேலை அட்டை பெரும்பாலோருக்கு இல்லை.

இவ்வாறு தெரிய வந்துள்ளது.

இதில் அரசாங்கம் தலையிட்டு வீட்டுக்கு வீடு சென்று கணக்கெடுப்பு நடத்தி வேலை அட்டைக்கு பதிவு செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அயுஷ்மான்பாரத் உள்ளிட்ட சுகாதார சேவை திட்டத்தை விரிவுபடுத்துதல் போன்றவற்றை செய்ய வேண்டும் என்று கருத்துக்கணிப்பு நடத்திய அமைப்பான ‘ஹியூமன் லிபர்ட்டி நெட்வொர்க்’ வலியுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்