புதிய கல்வி கொள்கையில் 8 வெளிநாட்டு மொழிகள்: இந்தியாவின் பன்மொழி திறன் அதிகரிக்கும்-நிபுணர்கள் கருத்து

புதிய கல்வி கொள்கையின்படி 8 வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுவதால், இந்தியாவின் பன்மொழி திறன் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2020-08-29 02:08 GMT
Photo Credit: PTI
புதுடெல்லி, 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையின்படி, மேல்நிலைப்பள்ளி அளவில் 8 வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்பட உள்ளன.
கொரியன், ஜப்பானிய மொழி, தாய், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுக்கீசிய மொழி, ரஷிய மொழி ஆகியவைதான் அந்த மொழிகள்.

கடந்த ஆண்டு புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை வெளியிடப்பட்டபோது, 7 வெளிநாட்டு மொழிகள்தான் இருந்தன. பின்னர், கொரிய தூதரகத்தின் வேண்டுகோளை ஏற்று கொரிய மொழியும் சேர்க்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில், கல்வி நிபுணர்களும், அறிஞர்களும் பேசியதாவது:-

8 வெளிநாட்டு மொழிகள் கற்பிப்பது நல்ல அறிகுறி. இது, நாட்டின் பன்மொழித்திறனை வலுப்படுத்தும். சாதி, மதம், இனம், மொழி, நிறம் ஆகியவை பரவுவதால் பயன் இல்லை. ஆனால், பன்மொழி திறன் பரவல், உலக அரங்கில் இந்தியாவின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை உறுதி செய்யும்.

2024-2025 நிதியாண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இன்றைய தகவல் தொடர்பு உலகத்தில் இந்தியா முன்னேற ராணுவ பலமும், பொருளாதார பலமும் மட்டும் போதாது. கூடியவரை நிறைய மொழிகளில் மேலும் மேலும் உரையாடுவதுதான் இதற்கு துணை செய்யும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் செய்திகள்