பறவைகளும்..அதன் அலகுகளும்..

பறவைகளின் அலகுகள் பலவகை, ஒவ்வொரு பறவையின் அலகும் அவற்றின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு இயற்கையாகவே அமைந்துள்ளன.

Update: 2021-03-22 15:34 GMT
பறவைகள் தங்களின் அலகுகளாலே உணவினை உண்கின்றன. அவற்றின் உணவுப் பழக்கத்தைப் பொறுத்தே, அவற்றின் அலகுகளின் வடிவமானது மாறுபடுகிறது.

குறுகிய மற்றும் வளைந்த அலகு:-
பழங்களை உண்ணும் பறவைகள் இவ்வகையான அலகுகளைப் பெற்றுள்ளன. கிளியை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இவற்றின் அலகானது, கடினமான பழங்கள், பருப்புக்கள், கொட்டைகள் ஆகியவற்றை உடைத்துத் திறக்க உதவுகிறது.

குறுகிய மற்றும் கடினமான அலகு:- தானியங்கள் மற்றும் விதைகளை உணவுகளாக உட்கொள்ளும் பறவைகள் இவ்வகை அலகினைக் கொண்டுள்ளன. உதாரணமாக மயில், புறா, சிட்டுக்குருவி போன்றவற்றை குறிப்பிடலாம்.

நீண்ட கூரிய வளைந்த அலகு:- ஹம்மிங் பறவை எனப்படும் ஓசினிச்சிட்டு, தேன்சிட்டு போன்றவை பூவில் உள்ள மகரந்தத்தை உணவாக உட்கொள்பவை. அவற்றிற்கு இவ்வகை அலகுகள் தேவையாக அமைந்துள்ளன.

வலிமையான கூரிய கொக்கி அலகு:- மாமிசத்தை உண்ணும் பறவைகளான கழுகு, பருந்து போன்றவற்றுக்கு இவ்வகை அலகுகள் அமைந்துள்ளன. தன்னுடைய வலிமையான கூரிய கொக்கி வடிவ அலகினைக் கொண்டு, மாமிசங்களை கீறி, பிளந்து சாப்பிடுகின்றன.

பரந்த மற்றும் தட்டையான அலகு:- தண்ணீரில் வாழும் வாத்துக்கள் உள்ளிட்ட சில பறவைகள் இதுபோன்ற பரந்த மற்றும் தட்டையான அலகினைப் பெற்றுள்ளன. இவற்றின் அலகின் இருபுறங்களிலும் துளைகள் உள்ளன. தண்ணீர் பறவைகளானது பூச்சிகள், புழுக்கள் மற்றும் நீர்வாழ் தாவரங்கள் என மண் கலந்த கலங்கிய தண்ணீரினை உட்கொள்கின்றன. அப்படி உட்கொள்ளும்போது மண் மற்றும் தண்ணீரானது, இவற்றின் துளைகளின் வழியாக வெளியேற்றப்படுகின்றன.

பரந்த நீண்ட கூரிய அலகு:- கொக்கு, கூழைக்கடா போன்ற சில நீர்வாழ் பறவைகள் இதுபோன்ற அலகுகளைக் கொண்டுள்ளன. இவைகள் தன் அலகைப் பயன்படுத்தி நீரில் வாழும் மீன்கள், தவளைகள் மற்றும் நண்டுகளை உணவாக உட்கொள்கின்றன.

வலுவான உளி வடிவ அலகு:- இதற்கு உதாரணமாகக் திகழ்வது மரங்கொத்திப் பறவை. இவ்வலகினைக் கொண்டு, மரத்தண்டுகளில் துளையிட்டு உள்ளிருக்கும் பூச்சி, புழுக்களை வெளியே இழுத்து உணவாக உட்கொள்கிறது.

மேலும் செய்திகள்