தலை சுற்றவைக்கும் ‘ராட்சத ராட்டினம்’

தலை சுற்றவைக்கும் ‘ராட்சத ராட்டினம்’ பற்றி பார்போம்...

Update: 2021-05-07 16:18 GMT
சுட்டி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் பொழுதுபோக்கு அம்சங்களில் ராட்டினமும் ஒன்று. சின்ன ராட்டினம், பெரிய ராட்டினம், பிரம்மாண்ட ராட்டினம் என ராட்டினத்தின் அளவு பெரிதாகும்போது, அதில் ஏறி நகரின் அழகை ரசித்து பார்க்கும் உற்சாகமும் அதிகரிப்பதுண்டு. 

அப்படி ராட்சத ராட்டினத்தில் உலா வர ஆசைப்படுபவர்கள், ‘துபாய் அய்ன்’ பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ளவேண்டும். அது என்ன..? என்கிறீர்களா, இதுதான் உலகிலேயே மிக பிரம்மாண்டமான ராட்டினம். துபாயின் புளூ வாட்டர் தீவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டில் இதன் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு, இந்த வருட இறுதியில் திறக்கப்பட உள்ளது.

இந்த ராட்சத ராட்டினம் மொத்தம் 9 ஆயிரம் டன் எடை கொண்டது. இது 8 ‘ஏர்பஸ்’ விமானங்களின் எடைக்கு சமமாகும். ராட்டினத்தின் பிரம்மாண்ட சக்கரத்தின் அச்சு 130 அடி நீளமும், 65 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 1,800 டன்கள். இந்த அச்சில் இருந்து வெளிப்புற சக்கரத்தை இணைக்க 192 குழாய்கள் போன்ற தடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டு, பிரமாண்ட சைக்கிள் சக்கரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ராட்சத ராட்டினமானது தரையில் இருந்து 689 அடி உயரமுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2016-ம் ஆண்டில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ‘நியூயார்க் வீல்’ என்ற ராட்சத ராட்டினமே உலகின் மிகப்பெரிய ராட்டினமாக சாதனை புத்தகங்களில் பதிவாகி உள்ளது. இதன் உயரம் 623 அடி உயரமாகும். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து நாட்டில் உள்ள ‘லண்டன் ஐ’ என்ற ராட்சத ராட்டினம் 443 அடி உயரம் கொண்டதாக உள்ளது.

தற்போது துபாயில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ராட்சத ராட்டினம் முறைப்படி திறக்கப்பட்டால் பல்வேறு சாதனை புத்தகங்களில் இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் செய்திகள்