கொண்டாட்டம் நிறைந்த ‘ஜாலி எக்ஸ்பிரஸ்’

1,365 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணிநேரத்தில் கடக்கும் இந்த ரெயிலை ஜாலி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கிறார்கள்.

Update: 2021-05-08 12:03 GMT
துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து அந்த நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள அர்ஸ் என்ற இடத்துக்கு சென்று வருகிறது, ஈஸ்டர்ன் ரெயில். 1,365 கிலோ மீட்டர் தூரத்தை 24 மணிநேரத்தில் கடக்கும் இந்த ரெயிலை ஜாலி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கிறார்கள். ஏனெனில் இந்த ரெயில் வழித்தடத்தில் இயற்கைக் காட்சிகள் கொட்டிக்கிடக்கின்றன. அதனை ரசித்தபடி, நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி செல்ல துருக்கி மக்கள் விரும்புகிறார்கள்.

அது மட்டுமல்ல, ரெயிலில் ஒதுக்கப்படும் பெட்டியை பயணிகள் எப்படி வேண்டுமானாலும் அலங்கரித்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது. இளைஞர்களும், காதலர்களும் இந்த ரெயிலை விரும்ப இதுவும் ஒரு காரணம். வயல்கள், அடர்ந்த காடுகள், குன்றுகள், மலைகள், ஆறுகள், பனி படர்ந்த பிரதேசம் என ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயற்கை அழகுக்கு வெகு அருகிலேயே பயணிப்பதால், 24 மணி நேரப் பயணம் இளைஞர்களுக்கு புதுவேகத்தையும் உற்சாகத்தையும் கரைபுரளச் செய்கிறது. இதுபோன்ற தருணங்களில் பயணிக்கும்போது தயக்கமின்றிக் காதலைச் சொல்வதும் அவர்களுக்கு எளிதாகிவிடுகிறது. அதன் காரணமாகவும் துருக்கியில் உள்ள பல இளைஞர்கள் தங்கள் காதலை வெளிப்படுத்த இந்த ரெயிலைதான் தேர்வு செய்கிறார்கள்.

காதலர்கள் மட்டுமல்ல, நண்பர்கள், தோழிகளுடன் மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்ளவும் ஈஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ரெயிலைத் துருக்கி இளைஞர்கள் நாடுகிறார்கள். அங்காராவில் பயணத்தை தொடங்குவதற்கு முன்பாக ரெயிலின் முன்பு செல்பி எடுத்துக்கொள்வதில் தொடங்கி 24 மணி நேரம் நீடிக்கும் இந்த நீண்ட பயணத்தில், ஆட்டம், பாட்டம் என கேளிக்கைச் செயல்களிலும் ஈடுபட்டு அவற்றை ஒளிப்படங்களாக எடுத்துக்கொள்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் உடனுக்குடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

மேலும் செய்திகள்