புத்தகம் படிப்பதில் சாதனை படைத்த சிறுமி ‘கியாரா’

புத்தகம் படிப்பதில் சிறுமி ‘கியாரா’ சாதனை படைத்துள்ளார்.

Update: 2021-05-09 17:31 GMT
நூல் பல கல் என மூதாட்டி அவ்வை ஆத்திச்சூடியில் கூறியுள்ளார். ஆனால் இன்றும் பல நூல்கள் கல் போலவே பலரது வீட்டு அலமாரிகளில் அசைவற்று உள்ளது. பாட புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை படிப்பதற்கு நேரமில்லை என கூறுபவர்கள் இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து விட்டனர்.

ஆனால் அமீரகத்தில் வசிக்கும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட 4 வயது சிறுமி கியாரா, 200-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்துள்ளார் என்ற செய்தி வியப்பூட்டுவதாக உள்ளது. மேலும் புத்தகம் படிப்பதிலேயே பல சாதனைகளை அந்த சிறுமி நிகழ்த்தியுள்ளார்.

கியாரா தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ரவி மற்றும் லிட்டில் மஹேந்திரா ஆகிய தம்பதிகளின் ஒரே மகள். இந்த தம்பதிகள் கடந்த 2015-ம் ஆண்டு முதல் துபாய் அல் அய்ன் பகுதியில் பல் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

கியாரா, தனது 3 வயது முதலே புத்தகங்களை வாசிப்பதில் ஈடுபாடு கொண்டுள்ளார். ஆசிரியர் மூலமாகவே இவரது ஈடுபாடு பெற்றோருக்கு தெரியவந்திருக்கிறது. ஆங்கில புத்தகங்களை சரளமாக வாசிப்பதுடன், படித்தபிறகு அதில் உள்ள கதைகள், தகவல்களை மழலை மொழியில் அழகாக கூறுவதுதான் ஆச்சரியத்தின் உச்சக்கட்டம். புத்தகங்களை படி என அந்த சிறுமியை பெற்றோரோ, ஆசிரியர்களோ கட்டாயப்படுத்தாத நிலையில் தானாகவே படிப்பதை வழக்கமாக்கி உள்ளார் கியாரா. ‘‘படிக்காமல் ஒரு நாளும் அவள் தூங்கியதில்லை’’ என அவரது பெற்றோர் பெருமையுடன் கூறுகின்றனர். இதற்காகவே வாரந்தோறும் புதிய புத்தகங்களை அவருக்கு வாங்கி கொடுக்கிறார்கள். இவர் செய்த சாதனை என்ன என கேட்டோம், அதற்கு கியாராவின் பெற்றோர்கள் சான்றிதழ்களுடன் விளக்கமளித்தனர்.

‘‘4 வயதில் 36 புத்தகங்களை இடைவிடாமல் 1 மணி 45 நிமிடங்களுக்குள் படித்து முடித்து விட்டார். எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோதான் நம் நினைவுக்கு வந்தது. இதற்காக இவருக்கு வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லண்டன் மற்றும் ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவைகளின் சாதனை விருது கிடைத்துள்ளது’’ என்றனர்.

கியாராவுக்கு நீச்சல் மற்றும் ஹைக்கிங் நடனம் தெரியும். எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வேண்டும் என விரும்புகிறீர்கள் என சிறுமியிடம் கேட்டபோது,‘‘செய்தியாளர் போன்ற பேச்சுத்திறன் கொண்ட பணியில் ஈடுபட வேண்டும் என விரும்புகிறேன்’’ என தெரிவித்தார், இந்த புத்தக காட்டுத்தீ. புத்தகங்களுக்கு மரணம் கிடையாது என்பதை இதுபோன்ற மொட்டுகள்தான் உலகிற்கு எடுத்துக்கூறுவதாக உள்ளது.

மேலும் செய்திகள்