சாலையோர நூலகம்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய மலாலா யூசப்சாய், ‘‘ஓர் ஆசிரியர், ஒரு புத்தகம், ஒரு பேனா இந்த உலகையே மாற்றிவிடும்’’ என்றார். கொரோனா தொற்று பரவல் காரணமாக புத்தக உலகம் டிஜிட்டல் முறைக்கு மாறிவிட்டது. மறைந்து கொண்டிருக்கும் புத்தக வாசிப்பு மலாலாவின் ஆலோசனைப்படி, இந்தியாவில் படிப்படியாக உயிர் பெற ஆரம்பித்துள்ளது.

Update: 2021-05-15 13:19 GMT
அந்தவகையில், ஆந்திராவைச் சேர்ந்த சங்கர் ரெட்டி பட்டிலோலா மற்றும் கேரளாவைச் சேர்ந்த விஷேஷ் ஆகியோர் தங்கள் ஊர்களில் நூலகங்களைத் தொடங்கியுள்ளனர். கொரோனா காரணமாக ஏற்பட்ட வாசிப்பு குறைபாட்டை தங்கள் கிராமங்களில் இவர்கள் போக்கியுள்ளனர்.விவசாயி, கவிஞர், செயற்பாட்டாளர் என பன்முகத்தன்மை கொண்ட 29 வயது பட்லோலா கடந்த ஆண்டு சொந்த செலவில் தனது கிராமத்தில் நூலகத்தை தொடங்கினார். இது குறித்து பட்லோலா கூறுகையில், ‘‘கடந்த கோடைகாலத்தின்போது, கொரோனா காரணமாக ஐதராபாத்தின் புறநகரில் புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்கியிருந்தேன்.ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அங்கிருந்து தங்கள் சொந்த ஊருக்கு வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தங்கள் போன் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினர். பொது முடக்கம் முடிந்ததும் நூலகங்களைத் தொடங்க முடிவு செய்தேன். அதன்படி, அருகில் உள்ள 3 கிராமங்களில் நூலகங்களைத் தொடங்கினேன்’’ என்றார். இதேபோல், கேரளாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் விஷேஷ், கொட்டரக்காராவிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தமது பெரும்குளம் கிராமத்தில் புத்தகக்கூண்டு என்ற பெயரில் சிறிய நூலகத்தைத் தொடங்கினார். இதேபோன்று கூண்டு நூலகங்களை பல இடங்களில் அமைத்தார்.

ஒரு நூலகம் அமைப்பதற்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. பலரும் நன்கொடையாகக் கொடுத்த 600 புத்தகங்கள் இந்த நூலகங்களில் இடம்பெற்றுள்ளன. பட்லோலாவின் இந்த நூலக இயக்கத்துக்காக படிக்க பயன்படுத்தும் விளக்குகள் மற்றும் சேர்களைப் பலரும் நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

‘‘ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உள்ளூர் மாணவர்கள்தான் நூலகங்களை நடத்துகிறார்கள். எங்கு தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்’’ என்கிறார் பட்லோலா. இதற்கிடையே, கேரளாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற பெரும்குளம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நூலகங்களைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.ஒவ்வொரு புத்தகக் கூண்டிலும் குறைந்தது 30 முதல் 50 புத்தகங்கள் வரை வைத்துள்ளனர். இதில் இலக்கியம்தான் அதிகம். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் குழந்தை முதல் பெரியவர்கள் வரையிலானோர் அருகில் உள்ள கூண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் படிக்கின்றனர்.

இது குறித்து விஷேஷ், ‘‘ஆன்லைனுக்கு மாறிய குழந்தைகளைப் புத்தகங்களைப் படிக்க வைப்பதுதான் எங்கள் நோக்கம். இந்தத் திட்டம் வெற்றியடையுமா என்ற சந்தேகம் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தது உண்மைதான். முதல் முறையாக கூண்டு நூலகத்தை இங்கு அமைத்தபோது நல்ல வரவேற்பு இருந்தது. இன்றைக்கு இந்தப் பகுதியில் புத்தகம் வாசிக்கும் வழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்துள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்