நாசாவிற்கு இணையாக... நிலாவை படம்பிடித்த 16 வயது மாணவன்

சமீபத்தில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளம் ஆகிய இரண்டிலும் மிகவும் அதிகமாக ஒரு நிலா படம் வேகமாக பகிரப்பட்டது. இந்தப் படம் மிகவும் தத்ரூபமாக இருந்தது.

Update: 2021-05-31 13:08 GMT
இந்தப் படத்தை பிரபல விண்வெளி மையமான நாசா எடுக்கவில்லை. இதை எடுத்தவர் இந்தியாவைச் சேர்ந்த 16 வயது மாணவன்.மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியைச் சேர்ந்தவர் பிரதமேஷ் ஜாஜு. இவர் தனது சிறுவயது முதல் விண்வெளி தொடர்பான கதைகள் மற்றும் கார்ட்டூன்கள் பார்த்து வளர்ந்துள்ளார். குறிப்பாக ‘ஸ்டார் வார்ஸ்’ மற்றும் ‘ஸ்டார் டிரேக்’ உள்ளிட்ட படங்கள் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக உலகமே வீட்டிற்குள் முடங்கியுள்ளது. இந்தச் சூழலில் கடந்த ஆண்டு முதல் பள்ளி வகுப்புகள் முறையாக நடைபெறவில்லை. இதன் 
காரணமாக தனக்கு இருந்த அதிக நேரத்தை தன்னுடைய விருப்பமான விண்வெளி துறை தொடர்பாக தெரிந்துகொள்ள செலவிட்டார்.

தனது 13-வது வயது முதல் இந்தியாவின் பழமை வாய்ந்த விண்வெளி தொடர்பான தனியார் தொண்டு நிறுவனமான ஜோதிர் வித்யா பரிசான்ஸ்தாவில் பயிற்சி பெற்று வருகிறார். அங்கு அவர்களிடம் இருந்து விண்வெளி தொடர்பான போட்டோகிராபி உள்ளிட்டவற்றை கற்று தெரிந்துள்ளார். இந்த ஊரடங்கு காலத்தில் அதைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.அப்போது முதல் நிலா, செவ்வாய், புதன் உள்ளிட்ட கோள்களை இவர் படம் பிடிக்கத் தொடங்கியுள்ளார். அந்தவகையில் சமீபத்தில் தன்னிடம் இருந்த கருவிகளை வைத்து நிலாவைப் படம் பிடிக்க முடிவு எடுத்தார். இதற்காக அவரிடம் இருந்த செலஸ்டிரான் 5 டெலஸ்கோப், விண்வெளி தொடர்பாக படம்பிடிக்கும் கேமரா இசட்.டபிள்யூ.ஓ ஏ.எஸ்.ஐ.120 எம்.சி.எஸ் (ZWO ASI120MC-S) மற்றும் ஸ்கை வாட்சர் உள்ளிட்ட சாதனங்களைப் 
பயன்படுத்தியுள்ளார். இதைக் கொண்டு சுமார் 4 மணி நேரம் முயற்சி செய்து நிலாவை சிறுசிறு பகுதிகளாக போட்டோ-வீடியோ எடுத்துள்ளார். அதன்பின்னர் எடுத்த 50 ஆயிரம் படங்கள் மற்றும் அதனுடன் கிடைத்த 186 ஜிகா பைட்ஸ் தரவுகளை 3 நாட்கள் ஆய்வு மற்றும் எடிட் செய்துள்ளார்.

அதன்பின்னர் இவருக்கு கிடைத்த நிலாவின் படங்கள் மிகவும் தத்ரூபமாக இருந்தது. இந்தப் படங்களை ஜாஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த அளவிற்கு துல்லியமாகப் படத்தைப் பெற அவர் நிலவின் சிறிய பகுதிகளைப் பல முறை வீடியோ எடுத்துள்ளார். குறிப்பாக 2000 பிரேம் வரை வைத்து வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்துள்ளார். அதன்பின்னர் பி.ஐ.பி.பி., ரெஜிஸ்டெக்ஸ், அடோப் போட்டோஷாப் உள்ளிட்ட கணினி செயலிகள் மூலம் இந்தப் படத்தை உருவாக்கி, உலக நாடுகளை 
அசத்தியிருக்கிறார்.

மேலும் செய்திகள்