ஊரடங்கிலும்... கால்நடைகளுக்கு கரிசனம் காட்டும் இளைஞர் படை

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் கொரோனா பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு, 500-க்கும் மேற்பட்ட நாய்கள் உட்பட கால்நடைகளுக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறது.

Update: 2021-05-31 14:04 GMT
‘ஸ்பீக் பார் அனிமல்' என்ற அமைப்பு. இந்த அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக தெருவில் திரியும் கால்நடைகளை மீட்டு, அவற்றுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் உணவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதும், பாதுகாப்பு கருதி மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால், உணவு கிடைக்காமல் தெருவில் திரியும் நாய்கள், மாடுகள் உள்ளிட்ட விலங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்பீக் பார் அனிமல் அமைப்பின் தலைவர் குஷால் பிஸ்வாஸ், விலங்குகளுக்கு உணவு வழங்கும் பணியைத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறார்.

“இந்தப் பொது முடக்கக் காலத்தில் கைவிடப்பட்ட இந்த விலங்குகளுக்கு எப்படி உணவளிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று வருத்தத்தைப் பதிவு செய்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “எங்கள் அமைப்பின் பணிகள் பற்றி சமூக வலைத்தளங்களின் வழியாக அறிந்த ஒடிசா முதல்- மந்திரி நவீன் பட்நாயக், எங்களை அழைத்துப் பாராட்டியதோடு, நிதிஉதவியும் செய்தார். அவர் செய்த உதவியால் நீண்ட காலம் கால்நடைகளுக்கு உணவளிக்க முடிந்தது. நாங்கள் தொடங்கி வைத்த இந்த சேவை, இன்றைக்கு மாநிலம் முழுவதும் பல நகரங்களுக்குப் பரவியுள்ளது. இந்த இக்கட்டான 
நேரத்தில் உணவின்றி தவிக்கும் விலங்களுக்குத் தன்னார்வலர்கள் உணவளித்துக் கொண்டிருக்கிறார்கள். புவனேஸ்வர் மக்களின் ஆதரவு இன்றி இந்தப் பணியை எங்களால் செய்திருக்க முடியாது.

கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவளிக்க மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மாநிலத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகள் உணவைத் தயாரித்து கால்நடைகளுக்கு அளிக்கும். புவனேஸ்வர் நகரம் முழுவதும் கைவிடப்பட்ட விலங்குகளுக்கு உணவளித்து வருகிறோம். சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினிகளைப் பயன்படுத்திப் பாதுகாப்பாக இருந்து கொண்டு, 
கால்நடைகளுக்கு எங்கள் தன்னார்வலர்கள் உணவு அளிக்கிறார்கள். நகரில் உள்ள நாய்கள், குரங்குகள், பசுக்களுக்கு உணவு அளிக்கும் வகையிலேயே உணவளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். 

எங்களுக்குக் கிடைத்து வரும் ஆதரவால், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளோம். நீண்ட நாட்கள் உணவில்லாவிட்டால் விலங்குகள் இறந்துவிடும்.கால்நடைகளை வீட்டில் வைத்திருந்தால் கொரோனா தொற்று பரவும் என்று வதந்தியைப் பரப்புகிறார்கள். இதனால் ஏற்பட்ட பயத்தின் காரணமாகவே, பெரும்பாலானோர் தங்களது செல்லப் பிராணிகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி வருகிறார்கள். தயவுசெய்து உங்கள் வீட்டுக்கு வெளியே நாய்களுக்கு உணவு வையுங்கள். ஒரு வேளையாவது அந்த விலங்குகள் பசியாற்றிக் கொள்ளும்” என்றார்.

மேலும் செய்திகள்