குழந்தைகள் மனதில் கொரோனா

கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் சூடான விவாத தலைப்பாக மாறி விட்டது. பெரும்பாலான குழந்தைகள் மனதில், உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் கொடிய வைரஸாக கொரோனா பதிந்துபோய்விட்டது.

Update: 2021-06-04 12:29 GMT
குழந்தைகள் வெளியே சென்று விளையாடக்கூடாது என்ற எண்ணத்தில் கொரோனா பற்றிய தவறான அபிப்பிராயமும் அவர்களிடத்தில் விதைக்கப்பட்டிருக்கிறது. அவர்களை பயமுறுத்துவதற்கு பதிலாக சரியான தகவல்களை அளித்து தைரியமூட்டுவது இன்றியமையாதது. குழந்தைகளிடம் சரியான தகவல் பகிரப் பட்டால் அவர்கள் மனதில் எழும் குழப்பங்கள் நீங்கிவிடும். வைரஸ் பிடியில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் தொடங்கிவிடுவார்கள். குழந்தைகளுக்கு கொரோனா வைரஸைப் பற்றிய விழிப்புணர்வை இணையதளங்கள் வழியாக ஏற்படுத்தும் பணியில் யுனிசெப் அமைப்பு ஈடுபட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.

கொரோனா வைரஸைப் பற்றி குழந்தைகளுக்கு என்னென்ன தகவல்களெல்லாம் தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். அப்போது அவர்கள் கூறும் தவறான தகவல்களுக்கு சரியான விளக்கம் கொடுங்கள். உதாரணமாக, கிருமி நாசினியை கொண்டு கைகளை கழுவினால் கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்று குழந்தைகள் கூறினால் அது எவ்வாறு சாத்தியம் என்பதை விளக்கி புரியவைக்கலாம்.

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் பற்றிய சரியான தகவல்களைக் கொடுத்த பிறகு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் புரியவைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் ஏன் பற்களை சுத்தம் செய்ய வேண்டும், கைகளை ஏன் அடிக்கடி கழுவ வேண்டும் என்பது பற்றி தெளிவுபடுத்தலாம். தரையில் கிடக்கும் உணவு பொருட்களை ஏன் சாப்பிடக்கூடாது, வாய், மூக்கு, கண்களை ஏன் அடிக்கடி தொடக் கூடாது என்பதை விளக்கி புரியவைக்கலாம். கொரோனா வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள பொம்மைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் விதைக்கலாம். உங்களுக்கு 
சரியாக தெரியாத விஷயங்களுக்கு யூகமாகவோ, பொய்யாகவோ எந்த தகவலையும் குழந்தைகளிடம் பகிரக்கூடாது.

குழந்தைகள் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும், ​​வானொலியைக் கேட்கும்போதும், ​​ இணையதளங்களை பயன்படுத்தும்போதும் குழந்தைகளுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இணையத்தில் பல வலைத்தளங்கள் தவறான தகவல்களை வழங்குகின்றன. அதனால் கவனமாக குழந்தைகளை கையாள வேண்டும். அரசாங்க வலைத்தளங்கள், யுனிசெப் அல்லது உலக சுகாதார அமைப்பு வலைத்தளங்கள், அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். கொரோனா வைரஸ் பற்றிய பயத்தை அவர்களின் மனதில் இருந்து அகற்றும் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.

மேலும் செய்திகள்