குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள்

குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும்.

Update: 2021-06-27 11:46 GMT
குழந்தை பருவத்திற்கும், டீன் ஏஜ் பருவத்திற்கும் இடைப்பட்ட வயது கொண்ட குழந்தைகளை வளர்ப்பது பெற்றோருக்கு சவாலான விஷயமாக இருக்கும். ‘ரெண்டுங்கெட்டான் வயது’ எனப்படும் இந்த பருவத்தில் அமைதியாகவே இருக்க மாட்டார்கள். ஏதாவது சேட்டை செய்து கொண்டிருப்பார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பார்கள். சில பெற்றோர் குழந்தைகளின் செயல்பாடுகளை சமாளிக்க முடியாமல் சட்டென்று கோபம் கொள்வார்கள். அது தவறானது. இந்த வயதில் குழந்தைகளிடம் இயல்பாக வெளிப்படும் சுபாவம் இது. அதனை கட்டுப்படுத்த முயற்சிப்பது அவர்களின் குணாதிசயத்தையும், ஆளுமை திறனையும் பாதிப்புக்குள்ளாகிவிடும். குழந்தைகள் செய்யும் சேட்டைகள், குறும்புகள், தவறுகள் அனைத்திற்கும் பெற்றோர் பதிலளிக்க வேண்டும். எது சரி, எது தவறு என்பதை விளக்கி புரியவைக்க வேண்டும். இந்த வயது குழந்தைகளிடம் சொல்லக்கூடாத விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

* இந்த வயதில் குழந்தைகளிடம் போதிய முதிர்ச்சி இருக்காது. குழந்தை சுபாவத்தில் இருந்து மீண்டு வந்திருக்கமாட்டார்கள். அதனால் அவர்களை குழந்தையாகவே வழிநடத்த வேண்டும். அடம் பிடிக்கும் சுபாவம் அதிகமாகவே எட்டிப்பார்க்கும். தங்களுக்கு பிடித்தமானதை கேட்டு அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள். அந்த சமயத்தில் பெற்றோர் கடுமை காட்டக்கூடாது. அப்படி செய்தால் சட்டென்று கோபம் கொண்டு அறைக்குள் சென்று விடுவார்கள். தனிமையில் இருந்துவிட்டு போகட்டும் என்று அப்படியே விட்டுவிடக்கூடாது. அது அவர்களின் குணாதிசயத்தை மாற்றிவிடும். மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எதற்கெடுத்தாலும் அடம்பிடிக்க தொடங்கி விடுவார்கள். அவர்களை அரவணைத்து வழிநடத்தி செல்ல வேண்டும்.

* குழந்தைகள் சேட்டை செய்யும்போதெல்லாம் ‘அடி வாங்கப்போறே’ என்று அதட்டுவதும், அடிப்பதும் கூடாது. அன்பாக எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். கடுமை காட்டுவது குழந்தைகள் மனதில் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். பெற்றோர் தங்களை வெறுப்பதாக நினைத்து தனிமையில் இருக்க பழகிவிடுவார்கள். அதற்கு இடம் கொடுத்துவிடக்கூடாது.

* தனது சகோதரன், சகோதரியுடன் சண்டை போடும் சுபாவம் இந்த பருவத்தில் அதிகரிக்கும். எதற்கெடுத்தாலும் சண்டை போடுவார்கள். அப்போது யாராவது ஒருவர் கடுமையாக திட்டிவிட்டால் சட்டென்று மனமுடைந்து போய்விடுவார்கள். அழவும் செய்வார்கள். தாங்கள் செய்யும் தவறுகள், முயலாமை, அச்சம் என குழந்தைகள் அழுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதற்காக ‘அழுமூஞ்சு. எதற்கெடுத்தாலும் அழுது கொண்டிருக்கிறாய்’ என்று கூறி திட்டக்கூடாது. அழுவது நல்ல பழக்கமல்ல என்று கூறி அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர் தைரியமும், தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டும்.

* ‘நீ எதற்கும் பிரயோஜனம் இல்லாதவன், கையாலாகாதவன்’ என்பது போன்ற வார்த்தைகளை கூறுவதை தவிர்த்துவிட வேண்டும். அவை அவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து விடும். ‘தாங்கள் எதற்குமே உதவாத நபர்’ என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள். இந்த வயதில் குழந்தைகள் தவறுகள் செய்வது, தோல்வி அடைவது எல்லாம் சகஜம். அதில் இருந்து மீண்டு வருவதற்கு பெற்றோர்கள்தான் பக்கபலமாக இருக்க வேண்டும்.

* தங்களது சகோதரன், சகோதரியுடனோ, மற்ற குழந்தை களுடனோ எதற்கெடுத்தாலும் ஒப்பிட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். அது அவர்களுடைய சுய மரியாதைக்கு பங்கம் விளைவித்துவிடும்.

* இந்த பருவத்தில் குழந்தைகள் சுறுதுறுவென்று இருப்பார்கள். ‘அதை செய்யாதே. இதை செய்யாதே’ என்று கடிவாளம் போடக்கூடாது. எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தால் அதுதான் தவறானது. அது அவர்களின் தனித்திறனையும், ஆளுமைத்திறனையும் பாதித்துவிடும். அவர்கள் செய்யும் செயல்களில் இருக்கும் நல்லவை, கெட்டவைகளை விளக்கி புரியவைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்