கொரோனா மரணம்: நினைவு சின்னமாக வளரும் மரங்கள்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் நினைவாக டெல்லிக்கு அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கிறார்கள்.

Update: 2021-06-27 13:28 GMT
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் நினைவாக டெல்லிக்கு அருகே உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கிறார்கள். அங்குள்ள ஷிகார்பூர் கிராமத்தில் உள்ள 30 குடும்பங்களில் குறைந்தபட்சம் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். 25 வயதாகும் ரிங்கு தியாகி, ஒரே வாரத்தில் தனது தாத்தா மற்றும் தாயை கொரோனாவுக்கு பலி கொடுத்துவிட்டார்.

‘‘அன்புக்குரியவர்கள் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவர்களை மிக சிறந்த முறையில் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவர்களின் நினைவாக மரக்கன்றுகள் நடுவதன் மூலமாக எதிர்காலத்தில் கிராமத்திற்கும் பலன் கிடைக்கும் என்பதையும் கருத்தில் கொண்டு அதனை செயல்படுத்தி விட்டேன்’’ என் கிறார், ரிங்கு தியாகி.

17 வயதாகும் ஆயுஷி தியாகி என்ற இளம் பெண்ணும் இதே கருத்தை முன் வைக்கிறார். இறந்தவர்களின் நினைவாக சிலைகள் அமைப்பதற்கு பதிலாக மரங்களை நினைவுச் சின்னமாக நடுவது, அவர்களது ஆன்மாவுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கையோடு சொல்கிறார். மரக்கன்று நட வேண்டும் என்ற தங்கள் திட்டத்தை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டதும் மன நிறைவை கொடுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

டெல்லி காவல் துறையில் பணிபுரியும் குல்ஷன் தியாகி என்ற காவலர்தான் கொரோனாவுக்கு மரணமடைந்தவர்கள் நினைவாக மரக்கன்று நடும் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அவரது நண்பர் பராஸ் தியாகி உள்ளிட்ட பலர் குழுவாக இணைந்து கிராமங்களை சுற்றி மரக்கன்றுகள் நட்டிருக்கிறார்கள்.

இது பற்றி பராஸ் தியாகி கூறுகையில், ‘‘அரசாங்கம் மூலம் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அவை பெரும்பாலும் வெற்றிகரமாக அமைவதில்லை. நடப்படும் மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதில் பராமரிப்பு செலவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தங்கள் நலனுக்காகத்தான் மரக்கன்றுகள் நடப்படுகின்றன என்ற எண்ணம் பெரும்பாலான பொதுமக்களிடம் இருப்பதில்லை. அதனால் பல மரக்கன்றுகள் கவனிப்பாரற்று காட்சியளிக்கும் நிலை நிலவுகிறது. ஆனால் தங்கள் குடும்பத்தினர் நினைவாகவோ, சொந்தமாக தங்கள் தோட்டத்திலோ மரக்கன்றுகளை நடும்போது நிச்சயம் அவற்றை கண்ணும், கருத்துமாக பராமரிப்பார்கள். இது சமூக ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் சாத்தியமான விஷயமாக இருப்பதை கவனித்தோம்’’ என் கிறார்.

ஷிகார்பூரில் மரக்கன்று நடும் பணியை கேள்விப்பட்டு அருகில் உள்ள கிராமத்தினரும் தாங்களாகவே முன்வந்து மரக்கன்றுகளை நடத்தொடங்கி இருக்கிறார்கள். இசாபூர் என்ற கிராமத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பரா மரிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்சா, மாலிக்பூர் மற்றும் உஜ்வா போன்ற கிராமங்களிலும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகள்