உணவே மருந்து

மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன.

Update: 2021-06-28 15:29 GMT
மனிதனின் அடிப்படை தேவைகளுள் முதன்மையானது உணவாகும். மக்கள் உண்ணும் உணவு பழக்க வழக்கங்களுமே அவர்களின் உடல் நலத்தை தீர்மானிக்கின்றன. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய சஞ்சீவி மருந்தாய் கருதப்படுகிறது.

இயற்கை உணவு

இயற்கை உணவு முறையினையும், இயற்கையோடு இயைந்த பழக்க வழக்கங்களையும் கடைப்பிடிப்பதன் மூலம் உடல் நலத்தையும் உள நலத்தையும் நாம் பாதுகாக்க முடியும்.

இன்று சமையல் முறைகள் நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடுகின்றன. உணவகங்கள் நம்மிடையே அதிகமாய் பெருகி உள்ளன. சத்துக்காக இல்லாமல் சுவைக்காக உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகமாய் இருக்கிறது. அட்டை பெட்டிகளிலும், தாள் பைகளிலும் பதப்படுத்தி அடைத்த ஆய்ந்த உணவு வகைகள், விரைவு உணவுகள் இன்று நம்மிடையே பழக்கத்திற்கு வந்துள்ளன. அதனால் நோய்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

வருமுன் காப்பது

உணவே மருந்து எண்ணும் நிலை மாறி, மருந்தே உணவு எண்ணும் நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். உயிர் உடலோடு கூடிய நிலையில் எப்போதும் புறச்சூழலோடு போராடி வருகிறது. அது வெற்றியடைவதே உடல் நலமாகும்.

திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாய் எடுத்துரைக்கிறார். முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டும்.

எனவே, வருமுன் காப்பதே நன்று என்பதை தாரகமந்திரமாய் நாம் கொண்டிருக்க வேண்டும். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும். நாம் உடல்நலத்தோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிந்து, நோய் வருமுன் காப்போம் உலகம் புகழ வாழ்வோம்.

மேலும் செய்திகள்