இந்தியாவை வலம் வருகிறார்; பெண் பாதுகாப்பை உறுதி செய்கிறார்

தனிமை பயணங்கள் ஆண்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சில பெண்கள் தங்களாலும் ஒற்றை ஆளாகப் பயணிக்க முடியும் என்பதை அவ்வப்போது எடுத்துக்காட்டி வருகின்றனர்.

Update: 2021-07-04 14:00 GMT
பயணங்கள் எப்போதுமே சுவாரசியமானது. அதை விரும்பாதவர் இருப்பது அதிசயமே. ஆனால், தனிமை பயணங்கள் ஆண்களுக்கு பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் சில பெண்கள் தங்களாலும் ஒற்றை ஆளாகப் பயணிக்க முடியும் என்பதை அவ்வப்போது எடுத்துக்காட்டி வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு பெண்தான் 28 வயதான இந்திராணி தஹால். தனியாக இந்தியாவைச் சுற்றிவரும் இவரது அனுபவங்களை இங்கே பார்ப்போம்!

2019-ம் ஆண்டு. ஒரு மாலைப் பொழுதில் தனது பைக் பயணத்தின்போது நக்சலைட் ஆதிக்கமிக்க, அவர்களின் கோட்டையாக இருக்கும் மத்திய இந்தியாவின் மாகாணமான ஜார்க்கண்டில் நடுகாட்டில் மாட்டிக்கொண்டுள்ளார். அவரது ஜி.பி.எஸ் வேலை செய்யவில்லை. மொபைல் போனுக்கும் சிக்னல் இல்லை. என்றாலும் இந்திராணி தனது பயணத்தை நிறுத்தவில்லை.

தனது ராயல் என்பீல்ட் 500 சி.சி. மோட்டார் பைக்கில் காட்டின் உள்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ​ஏ.கே-47 துப்பாக்கிகளுடன் தோன்றிய சிலர் அவரை இந்தப் பகுதியை விட்டு வெளியேற சொல்லி இருக்கிறார்கள். இந்தப் பகுதி பெண்களுக்குப் பாதுகாப்பானதில்லை என்றும், நெடுஞ்சாலைப் பகுதியில் பயணம் செய்வது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

வேறு யாராக இருந்தாலும் இந்த மாதிரியான தருணத்தில் இதுபோன்ற அச்சத்தை எதிர்கொள்ளும் சூழலில் பயணத்தை அப்படியே விட்டுவிட்டு வீடு திரும்பியிருப்பர். ஆனால், இந்திராணி அப்படி செய்யவில்லை.

2020 நவம்பரில் நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே இந்திராணி தனது என்பீல்ட் பைக்கில் இந்தியாவைச் சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டார். இவரது இந்தப் பயணத்தின் நோக்கம், மற்றவர்களைப் போல அல்ல. பெண்களுக்கு வெளியே இருக்கும் பாதுகாப்பற்ற தன்மையைப் போக்கவும், ஒற்றைப் பெண்ணாக பயணம் செய்வதற்கு இந்தியா பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கவும் இந்த சாகசப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார், இந்திராணி.

“பெண்கள் நம் நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்கு தகவல் தொடர்பு சாதனங் களை மட்டுமே சார்ந்து இருக்கக் கூடாது என்று நான் விரும்புகிறேன். அதற்குப் பதிலாக சொந்தமாக அவர்கள் நாட்டை சுற்றிப்பார்க்க வேண்டும். பெண்கள் பொது இடங்களை தங்களுக்கும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்த முன்வர வேண்டும்.

பொது அறிவைப் பயன்படுத்தி அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் நிச்சயம் இந்தியா பாதுகாப்பானது. நான் மாலைப் பொழுதுவரை மட்டுமே பயணம் செய்வேன். பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலைகளே எனது தேர்வாக இருக்கும். அவை தனிமையாக இருப்பதைக் காட்டிலும் மிகவும் நெரிசலானவை’’ என்கிறார் இந்திராணி தஹால்!

16 வயது முதலே அவர் பைக் ஓட்டிவந்தாலும் மிக நீண்ட பயணமாக அமைந்தது இந்த முறைதான். இந்திராணியின் இந்த சாகசப் பயணம் தொடங்கியது கொரோனா கட்டுப்பாடுகள் நீங்கியபிறகுதான். பட்டப்படிப்பு படித்துள்ள இவர், கப்பலில் பணிபுரிந்துவந்தவர். கொரோனா முதல் அலையின்போது கரீபியன் மற்றும் தென் அமெரிக்காவைச் சுற்றி பயணம் செய்தவர்.

கடந்த ஆண்டு இறுதியில் மேற்கு வங்காளத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கிறார். நீண்ட நாள், அவரால் தொடர்ந்து வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் தனது சொந்த ஊரான கோரக்பூரில் இருந்து மேற்கு வங்கத்தின் இமயமலை அடிவாரத்தில் உள்ள தனது பூர்வீக கிராமமான கலிம்பொங்கிற்கு தனி ஆளாக பயணம் செய்துள்ளார். அப்போது கிடைத்த ஊக்கமே அவரை இந்தியா முழுவதும் பயணம் செய்யத் தூண்டியிருக்கிறது. தஹால் இப்போது 18 இந்திய மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்கள் வழியாகப் பயணம் செய்துள்ளார்.

முதலில் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். என்றாலும் பயணம் தந்த அனுபவத்தில் விரைவாகவே, அடுத்த இலக்கை அடைவதற்கு, தேவையற்ற நிறுத்தங்களைத் தவிர்ப்பதற்கு, நேரத்தைக் கணக்கிட கற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமில்லை, அவரின் இலக்கையும் இந்தப் பயணத்தில் வெகுவாகவே உணர்ந்துள்ளார். ஆம், இந்தியாவில் பெண்கள் பாதுகாப்புதான் அது.

“பயணத்தின் இடையே ஹெல்மெட் அணிந்த என்னைப் பார்க்கும் மக்கள் என்னை ஓர் ஆணாக கருதி பேசுவார்கள். ஆனால், நான் ஹெல்மெட்டை நீக்கி பெண் என்பதை வெளிப்படுத்தினால் எனக்கு நிறைய ஆலோசனைகளை குறிப்பாக, தங்குமிடம், நான் செல்ல வேண்டிய திசைகள், சிறந்த உணவகம் போன்றவற்றை சொல்லுவார்கள். நான் சென்ற எல்லா இடங்களிலும் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. என்னைப் போன்ற சக பைக்கர்கள் என்னை அவர்களின் வாட்ஸ் ஆப் குழுக்களில் சேர்த்துள்ளனர். அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கேரளாவின் கோவளத்தில், கடற்கரையில் என்னைச் சந்தித்த ஒரு போலீஸ்காரர் எனக்கு உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்வதற்கு அவரது தொலைபேசி எண்ணையும், பிரதான காவல் நிலையத்தின் நம்பரையும் கொடுத்தார்.

பயணம் நமது எண்ணத்தை மாற்றியமைக்க கூடியது. எப்படி என்றால், ஜார்க்கண்ட் ஒரு வளர்ச்சியடையாத மாநிலமாக கருதப்படுகிறது. ஆனால், அங்குதான் சிறந்த எட்டு வழி நெடுஞ்சாலைகள் உள்ளன.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் தங்கியபோதுதான் இதுவரை நான் பாதுகாப்பாக உணர்ந்த இடங்களில் அது முதன்மையாக இருந்ததை அறிந்தேன். குஜராத்தின் தோலவீராவில், நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். ஆறு பேர் கொண்ட அவரின் குடும்பம், என்னை அவர்களில் ஒருவராக நடத்தினர்.

எனது பயணத்தின் மிக அழகான அனுபவங்களில் ஒன்று, துணைக் கண்டத்தின் தெற்கு முனையிலுள்ள தனுஷ்கோடியில் நான் கண்ட வெறிச்சோடிய, அழகிய கடற்கரை.உடனடியாக, நீச்சலுடை அணிந்து, டைவ் செய்தேன். கரீபியன் கடற்கரைகளை விடவும் இது சிறந்ததாக இருந்தது!” என்று தனது பயண அனுபவத்தை பகிர்கிறார் இந்திராணி தஹால்.

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக கருதப்படும் உத்தரப்பிரதேசத்தில் தங்கியபோதுதான் இதுவரை நான் பாதுகாப்பாக உணர்ந்த இடங்களில் அது முதன்மையாக இருந்ததை அறிந்தேன். குஜராத்தின் தோலவீராவில், நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். ஆறு பேர் கொண்ட அவரின் குடும்பம், என்னை அவர்களில் ஒருவராக நடத்தினர்.

மேலும் செய்திகள்