ஏலம் விடப்படும் சொத்து

விவசாயக்கடன், கல்விக்கடன், தொழில் முனைவோர் கடன், வீடு கட்ட கடன் என மக்களின் பல தேவைகளை முன்னிட்டு வங்கிகள் கடன் தருகின்றன. அந்த வகையில் அடமான கடனும் ஒன்று. பெரும்பாலும் பல்வேறு தேவைகளை முன்னிட்டு இந்த கடனை வங்கி வாடிக்கையாளர்கள் வாங்குகிறார்கள். நிலத்தின் பெயரிலோ, நிறுவனம் அல்லது வீட்டின் பெயரிலோ இந்த கடன்கள் வாங்கப்படும்.

Update: 2021-07-15 11:36 GMT
இம்மாதிரியான கடன்களுக்கு ஒழுங்காக தவணை கட்ட முடியாது போனால் உரிய காலக்கெடுவுக்குப் பிறகு வங்கிகள் அந்த சொத்தை கையகப்படுத்தும். இந்த மாதிரி கையகப்படுத்தப்படும் சொத்துகள் முறையான சட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ஏலத்துக்கு விடப்படும். ஏலத்துக்கு வரும் வீடுகள், நிலம், நிறுவனங்களை ஏல முறையில் வங்கிகள் விற்பனை செய்து, தங்களுக்கு சேர வேண்டிய தொகையை எடுத்துக்கொள்ளும். இது மட்டுமல்லாது வீடு கட்டக் கடன் வாங்குபவர்களும் மாத, தவணைகள் கட்ட தவறும்போது உரிய காலக்கெடுவுக்கு பிறகு வீடுகளை வங்கிகள் கையகப்படுத்தும். இது பொதுவான நடைமுறை. பொதுவாகவே சொத்தை ஜப்தி செய்த பிறகு அதன் ஏலத்துக்கு வங்கிகள் அழைப்பு விடுக்கும். ஏலத்தில் பங்குகொள்ள முன் தொகை கட்ட வேண்டும். ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ள முடியும். முன்பு நேரடியான ஏல முறை இருந்துள்ளது.

ஏலத்தில் வரும் சொத்தை வாங்கலாமா? என்றால், ஏலத்துக்கு வரும் சொத்துக்கு எதிராகத்தான் வங்கிகள் கடன் அளித்திருக்கும். அதனால் அந்த சொத்துக்கு கடன் அளிக்கும்போதே வங்கிகள் அந்தச் சொத்து குறித்து தீர விசாரித்து, சட்ட ஆலோசனையும் பெற்றிருக்கும். அந்தச் சொத்தில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் கடன் வழங்கப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை. வில்லங்கச் சான்றிதழ் எல்லாம் வாங்கப்பட்டிருக்கும். புதிததாக ஒரு சொத்தை வாங்கும்போது இதையெல்லாம் நாம்தான் தேடிச் சேகரிக்க வேண்டும். ஏலத்துக்கு வரும் சொத்தில் இதையெல்லாம் வங்கிகள் ஒழுங்காகச் செய்திருக்கும். அதனால் நமக்கு அலைச்சலும் பணமும் மிச்சம்.

வங்கிகள் அதிக லாபத்துக்கு சொத்தை விற்க நினைக்காது. சொத்துக்கான விலை நியாயமானதாகத்தான் இருக்கும். சந்தையில் இருக்கும் நில மதிப்பைக் காட்டிலும் ஏலத்துக்கு வரும் சொத்தின் மதிப்பு  சற்றுக் குறைவானதாகவே இருக்கும் என சொல்லலாம். ஏலத்தில் ஒரு சொத்தை வாங்கும்போது அது வெளிப்படையான பரிவர்த்தனையாக இருக்கும். இதில் கள்ளப்பணம் புழங்க வாய்ப்பில்லை.

மேலும் செய்திகள்