‘சுவாரசியம்’ நிறைந்த ‘சாக்கடல்’

‘டெட் சீ’ என அழைக்கப்படும் ‘சாக்கடல்’ உண்மையில் கடல் அல்ல. மிகப் பெரிய ஏரி. இஸ்ரேல், ஜோர்டான் நாடுகளின் எல்லையில், ஜோர்டான் பகுதியில் அமைந்திருக்கிறது. சுமார் 67 கி.மீ. நீளம், 15 கி.மீ. அகலம், 300 மீட்டர் ஆழம் கொண்டது, சாக்கடல்.

Update: 2021-07-30 17:37 GMT
வழக்கமான கடல் நீரில் உள்ளதைவிட சாக்கடல் நீரில் மிக அதிக அளவில் உப்பு இருக்கிறது. ஒரு லிட்டர் கடல் நீரைக் காய்ச்சினால் 35 கிராம் உப்பு கிடைக்கும். ஆனால், 1 லிட்டர் சாக்கடல் நீரைக் காய்ச்சினால் 340 கிராம் உப்பு கிடைக்கும். அப்படியென்றால் நீரின் தன்மையைப் பார்த்துக்கொள்ளுங்கள். சாக்கடல் நான்கு பக்கமும் நிலத்தால் சூழப்பட்டிருக்கிறது. சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் நீர்நிலைகளில் கனிம உப்புகள் அதிகம் உள்ளன. அவை சாக்கடலில் கலக்கும்போது உப்பின் தன்மை அதிகரித்துவிடுகிறது. சாக்கடல் நீர் வேகமாக ஆவியாகிறது. அதே நேரம் மிகக் குறைவாகவே மழை பெய்கிறது. இதனால், நீரில் உள்ள உப்பின் அடர்த்தி அதிகரிக்கிறது.

சாக்கடலில் மீன், ஆமை, நண்டு, நத்தை, கடல் தாவரங்கள் போன்ற எந்த உயிரினங்களும் இல்லை. உயிரினங்கள் வசிக்க முடியாத அளவுக்கு நீரில் உப்பு இருப்பதே இதற்குக் காரணம். அதனால்தான் சாக்கடல் என்று பெயர். ஆனால், மழை அதிகம் பெய்யும் காலங்களில் உப்புத் தன்மை சிறிது குறையும். அப்போது குறுகிய கால உயிரினங்கள் சில வாழ்வதுண்டு. சாக்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல பறவை இனங்களும் ஒட்டகம், நரி, முயல் போன்ற விலங்கினங்களும் வாழ்கின்றன.

நீச்சல் தெரியாதவர்கள்கூடச் சாக்கடலில் மூழ்க முடியாது. ஆம்..! சாதாரண நீரைவிட உப்பு நீரின் அடர்த்தி அதிகம். சாதாரண நீரில் போடும் முட்டை கீழே சென்றுவிடும். சிறிது உப்பைப் போட்டால், முட்டை மேலே மிதக்க ஆரம்பித்துவிடும். இதே தத்துவத்தில்தான் சாக்கடலும் மனிதர்களை மிதக்கவைக்கிறது! இதனால் சாக்கடலில் மிதந்துகொண்டே புத்தகங்களைப் படிக்க முடியும்!

சாக்கடல் சேற்றை உடல் முழுவதும் பூசிக்கொண்டு, நீண்ட நேரம் படுத்திருந்தால் தோல் நோய்கள் குணமாவதாகச் சொல்லப்படுகிறது. தசை வலி, மூட்டு வலிகளைக் குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. கடல் மட்டத்தைவிடத் தாழ்வான பகுதி என்பதால் காற்றின் அடர்த்தியும் அதிகம். ஆக்சிஜனும் அதிகம். சுவாசம் தொடர்பான பிரச்சினைகளும் தீரும் என்கிறார்கள். சாக்கடல் உப்பு, சேற்றில் இருந்து மருந்துகளும், அழகு சாதனப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் செய்திகள்