தமிழனாக பெருமை கொள்வோம்...

தனது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதிலும், நாகரிகங்களை கடைப்பிடிப்பதிலும் தமிழனை மிஞ்சிட எவரும் இல்லை.

Update: 2021-09-06 08:09 GMT
தனது பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதிலும், நாகரிகங்களை கடைப்பிடிப்பதிலும் தமிழனை மிஞ்சிட எவரும் இல்லை. பாரம்பரியத்தை போற்றினாலும் தேசிய கடமைகளிலிருந்து தவறுவதில்லை. வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தம் உரிமைகளையும், கடமைகளையும் செய்ய தவற மாட்டான். வெளிநாட்டவராய் வாழ்ந்தாலும் தமிழர் பண்புகளும், நற்குணங்களும் என்றென்றுமே அவனை விட்டு நீங்காது.

தமிழன் தன் பெருமையை கூறுவதைக் காட்டிலும் தனது நாட்டின் பெருமையையும், அதனுடன் சேர்த்து தனது தமிழ் மொழியின் பெருமையையும் சேர்த்து சொல்லி பேரின்பம் கொள்வான். எறும்பை போன்ற சுறுசுறுப்பான துள்ளிய செயல் வேகம், காரியத்தை கட்சிதமாக செய்து அசத்தும் தந்திரம் நிறைந்தவன். சிறு நூல் கிடைத்தாலும் அதை பிடித்துக்கொண்டு முன்னேறும் மனத்துணிச்சல் நிறைந்தவன். கலைகளைப் போற்றி பாராட்டுவதிலும் சிறந்தவன். தனது பாரம்பரிய கலைகளை அனைவருக்கும் கற்பித்தும், கலைகளை அழியாமல் போற்றி காப்பதிலும் சிறந்தவன். ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்பன போன்ற வரிகள் உழவனை குறிப்பதாகும். தமிழை போற்றி பேணுவதை போன்று தனது தொழிலையும் போற்றி பேணுபவன் தமிழன் என்பதை இவை எடுத்துக்காட்டுகிறது. உழவிலும், தொழிலிலும் தமிழன் முன்னே நிற்கிறான்.

பண்டைக்காலத்தில் கல்வெட்டு, ஓலைச்சுவடி ஆகியவற்றால் தகவல்களை பதித்து வைத்தார்கள். இணைய ஊடகத்தைத் தமிழர்கள் முதலில் இருந்தே அறிந்து நன்கு பயன் படுத்தி வந்துள்ளனர். அவை தமிழ் இலக்கியங்கள், வலைப் பதிவுகள் மற்றும் திறந்த நிலை மென்பொருட்களுக்கான பங்களிப்புகள் என்று எல்லா வகையிலும் பரவி வருகிறது.

மொழிகள் பல இருக்க அதில் நம் தாய்மொழி இருக்கிறதா என்று ஆர்வம் கொண்டு தேடி அலையும் கண்கள், தமிழை ஊடகம் மூலம் கேட்கும்போது தேன்வந்து காதில் பாய்வது போன்ற உணர்வு. பிற மொழிக்கு பிறப்பிடம் கொடுத்த மொழியே என் தமிழ்மொழி. தமிழின் பெருமையை அறியவே பல்வேறு நாட்டவரும் தமிழை விரும்பி கற்கின்றனர். ஊடகங்கள் தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன.

இப்படி, ‘தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா..’ என்கின்ற வாக்கியத்திற்கு இணங்க தமிழன் எந்த இடத்திற்கு சென்றாலும் அவன் மதிப்பை தானே தேடிக்கொள்வான். தமிழ் ஊடகங்கள் வழியிலே தகவல்கள் பரிமாற்றம் ஏற்படுகின்றது. அதனால் தமிழர்களும், பல்வேறு மொழி பேசுபவர்களும் பயனடைகின்றனர்.

மேலும் செய்திகள்