கின்னஸ் சாதனை ஜோடி

மனதார ஒருவரை நேசிக்கும்போது அந்த நபரின் குறைகளை கவனிக்க மாட்டார்கள். அதைத்தான், ‘காதலுக்கு கண்ணில்லை’ என்று சொல்வார்கள். ஜேம்ஸ் லஸ்டட் - சோலி லஸ்டட் ஜோடியும் அந்த ரகத்தை சேர்ந்தவர்கள்தான். 33 வயதாகும் நடிகர் ஜேம்ஸ் 109.3 செ.மீ. உயரம் உடையவர். அதாவது 3 அடி 7 அங்குலம் கொண்ட குள்ளமான மனிதர்.

Update: 2021-09-17 16:12 GMT
27 வயதாகும் சோலி, ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது உயரம் 166.1 செமீ. அதாவது 5 அடி 5.4 அங்குலம் உயரம் கொண்டவர். இருவருக்கும் இடையே உயரத்தில் 56.8 செ.மீ. வித்தியாசம் இருக்கிறது. அதாவது சோலியுடன் ஒப்பிடும்போது ஜேம்ஸ் சுமார் 2 அடி உயரம் குறைவாக இருக்கிறார். ஆனாலும் காதல் இருவரையும் வாழ்க்கையில் ஒன்றிணைய வைத்துவிட்டது. அத்துடன் திருமணமான தம்பதியர்களில் உயரத்தில் மிகப்பெரிய வித்தியாசம் கொண்ட ஜோடி என்ற கின்னஸ் சாதனையையும் படைக்க வைத்துவிட்டது.

ஜேம்ஸ், மரபணு கோளாறு காரணமாக குள்ளமான மனிதராகவே காட்சி அளிக்கிறார். டிஸ்ட்ரோபிக் டிஸ்ப்ளாசியா என்னும் நோய் பாதிப்பு காரணமாக அவரால் உயரத்தை அதிகரிக்க முடியவில்லை. 2012-ம் ஆண்டு ஜேம்ஸ் தனது சொந்த ஊருக்கு ஒலிம்பிக் ஜோதியை கொண்டு செல்லும் வாய்ப்பை பெற்றார். அதன் மூலம் சோலியின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. நண்பர்கள் சிலரும் சோலியை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

சோலிக்கு தன்னை விட உயரமான மனிதர்களுடன் பழகுவதற்குத்தான் பிடிக்கும். ஆனால் ஜேம்ஸை சந்தித்தபிறகு அவர் மனம் மாறியது. காதல் வயப்பட்டார். ஆனாலும் பிறர் தன்னுடைய நிலைப்பாட்டை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற தயக்கம் சோலியிடம் இருந்தது. ஜேம்ஸின் அன்பும், ஆறுதலும் அந்த தயக்கத்தை தகர்த்தெறிய வைத்தது. இருவரும் வாழ்க்கையில் ஒன்றிணைந்துவிட்டார்கள்.

மேலும் செய்திகள்