வெளிமான்களின் வாழ்விடம்

சென்னை கிண்டி சிறுவர் பூங்காவை மட்டுமே பெரும்பாலோர் அறிந்திருப்பார்கள். அதே வளாகத்திலேயே பாதுகாக்கப்பட்ட தேசியப் பூங்காவாக இருக்கும் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களின் வேட்டைக் காடாக 505 எக்ேடர் பரப்பளவில் இருந்தது.

Update: 2021-09-21 16:08 GMT
இங்கிலாந்தை சேர்ந்த கில்பெர்ட் ரோட்ரிக்ஸ் என்பவருக்குச் சொந்தமாக இருந்த இப்பகுதி ‘கிண்டி லாட்ஜ்’ எனப்பட்டது. இதை, 1821-ம் ஆண்டில் அன்றைய மெட்ராஸ் அரசு ரோட்ரிக்சிடம் இருந்து அந்த இடத்தை அன்றைய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியது. இந்திய விடுதலைக்குப்பின் இப்பகுதி தமிழக கவர்னர் மாளிகையானது. 1961-ல் இருந்து 1977-க்குள் அதில் 172 எக்டேர் நிலம் ஐ.ஐ.டி., காந்தி மண்டபம் போன்றவற்றுக்காக வழங்கப்பட்டது. எஞ்சிய காட்டுப் பகுதியை 1978-ம் ஆண்டு தேசியப் பூங்காவாக அரசு அறிவித்தது. இந்தப் பாதுகாப்பால் மட்டுமே இன்றுவரை இந்த காடு பல அரிய தாவரங்கள், விலங்கினங்களின் வாழ்விடமாக திகழ்கிறது.

இங்கு பல ஆண்டுகளாகவே வெளிமான்கள் வாழ்கின்றன. ஆனால், புள்ளிமான்கள் 1940-களில்தான் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. ஆண்டிலோப் பிரிவில் வரும் வெளிமானுக்கு மாறுபட்ட திருகுக்கொம்புகள் இருக்கும். புல்வெளியில் வாழும் பண்பு கொண்ட இவை, சுமார் 60 கி.மீ. வேகத்தில் ஓடும் இயல்புடையவை. ஒருகாலத்தில் அதிக அளவில் இருந்த இந்த இனம் இன்று கள்ளவேட்டை, வாழிட அழிவு போன்ற காரணங்களால் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டதால் காட்டுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 1972-ன்படி, இது பாதுகாக்கப்படும் உயிரினமாக அறிவிக்கப்பட்டது.

வெளிமான்களுக்கு திறந்த புல்வெளி நிலங்கள் அத்தியாவசியம். ஆண் வெளிமான் ஒரு திறந்த வெளிப்பகுதியைத் தனதாக்கிக்கொண்டு சில பெண் மான்களுடன் வசிக்கும். வேறு ஆண் மான்கள் அப்பகுதியில் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். இது அவற்றின் உணவுப் பழக்கத்தில் மட்டுமன்றி இனப்பெருக்கத்திலும் பெரும் பங்கு வகிக்கிறது. இதுபோன்ற புல்வெளிப் பகுதிகள் இப்பூங்காவில் குறைந்துவிட்டன. எஞ்சியிருக்கும் நிலத்தில்தான் போலோ மைதானம் இருக்கிறது. இந்தப் பூங்காவின் மொத்தப் பகுதியில் சுமார் 3 சதவீதப் பரப்பளவில் போலோ மைதானம் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு போலோ போட்டிகள் நடத்தப்பட்டுவந்தன. பின்னாட்களில், வெளிமான்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அந்தப் போட்டிகள் கைவிடப்பட்டன.

இந்த பூங்காவிலேயே, வெளிமான்கள் எப்போதும் காணப்படும் பகுதி இந்த மைதானம்தான்.

மேலும் செய்திகள்