கடல் அழகை காட்சிப்படுத்தும் மீனவ இளைஞர்

சமூக வலைத்தளங்களில் பொழுதை போக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் அதனை வருமானம் ஈட்டித் தரும் தளமாக மாற்றிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். கேரள மாநிலம் ஆழிக்கல் பகுதியை சேர்ந்த இளைஞர் விஷ்ணு வும் அப்படிப்பட்ட ரகத்தை சேர்ந்தவர்தான். மீனவ இளைஞரான இவர் யூடியூப்பின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

Update: 2021-09-21 16:26 GMT
21 வயதான விஷ்ணு யூடியூப் சேனல் தொடங்கியபோது, அதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை எண்ணி வருந்தி இருக்கிறார். தொடர் முயற்சிகளுக்கு பிறகு `கடல்மச்சன்’ என்ற யூடியூப் சேனல் வடிவில் பிரபலமாக தொடங்கி இருக்கிறார். இப்போது இவரது சேனலை, 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்திருக்கிறார்கள்.

“நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், என் வாழ்க்கையின் ஓர் அங்கமாக கடல் மாறிவிட்டது. என் தந்தையுடன் கட்டு மரத்தில் சென்று மீன் பிடித்த அனுபவம் உண்டு. 10-ம் வகுப்பு படித்தபோதே ஆழிக்கல் துறைமுகத்தில் வேலை பார்க்க தொடங்கிவிட்டேன். பெரும்பாலான எனது வீடியோக்கள் மீனவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருக்கும். பேஸ்புக்கில் நான் பதிவேற்றம் செய்த ஒவ்வொரு வீடியோவையும் குறைந்தபட்சம் 10 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். எனது சேனல் இவ்வளவு பிரபலம் ஆகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று இன்னும் எனக்கு தெரியவில்லை’’ என்பவர் தனது சேனல் பிரபலமாக தொடங்கியதும் டீக்கடை நடத்தும் தாய் சந்தியாம்மா மற்றும் சகோதரி முத்து ஆகியோரின் பங்களிப்புடன் சமையல் சேனலை தொடங்கி இருக்கிறார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

‘‘இன்று என் அம்மாவுக்கு என்னை விட அதிகமான ரசிகர்கள் உள்ளனர். அவரது சமையல் நேரலை 25 லட்சம் பார்வையாளர்களை கொண்டிருந்தது. கடலுக்குள் இருந்து வலம்புரி சங்கு எடுப்பதற்கு தூத்துக்குடிக்கு சென்றேன். அங்கு 5 நாட்கள் தங்கி இருந்து அதற்கான பயிற்சிகளை எடுத்தேன். கடலுக்குள் மூழ்கி சங்கு எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான் மீனவன் என்பதால், மீன்பிடி தொழிலை முக்கிய தொழிலாகக் கருதுகிறேன். மீன்பிடிப்பதிலேயே ஆர்வமும் அதிகமாக இருப்பதால், அதனை வீடியோவாக பதிவு செய்கிறேன். கடந்த 4 ஆண்டுகளாக எனது சேனலில் குறிப்பிட்ட வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்கிறேன். இப்போதைக்கு முழுநேர யூடியூபராகும் திட்டம் இல்லை” என்கிறார்.

கானாங்கெளுத்தி மீன்கள் தொடர்பாக இவர் வெளியிட்ட வீடியோவை சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுபோலவே இவரது தாயார் சமைக்கும் கடல் உணவு குறித்த வீடியோக்களும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்றுள்ளது. கடல்வாழ் உயிரினங்களில் டால்பின்களை வீடியோவாக பதிவு செய்வதற்கு ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார். 16 முறை கடலுக்குள் பயணித்த பிறகே டால்பின்களைப் படம் பிடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. டால்பின்களை அருகிலிருந்து படம்பிடிக்க 100 நாட்டிக்கல் மைல்கள் பயணிக்க வேண்டியிருந்திருக்கிறது. வீடியோ எடுத்தபோது கேமராவும் சேதமடைந்திருக்கிறது. இருந்தபோதிலும் கடுமையாக போராடி தான் எதிர்பார்த்தபடியே டால்பின்களை அழகாக காட்சிப்படுத்தி இருக் கிறார். அந்த வீடியோவையும் லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்திருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்