‘மோதல்’ வரைபடம்

உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இப்போது உள் நாட்டுப் போரோ, ஆயுத மோதலோ நடைபெற்றுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

Update: 2021-09-25 14:07 GMT
இத்தகைய ஆயுத மோதல்கள் எந்த அளவுக்குத் தீவிரமாக இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினால் இரின் (IRIN) அமைப்பு உருவாக்கியுள்ள இணைய வரைபடம் பேருதவியாக இருக்கும். உலகின் மூலை முடுக்குகளில் நடைபெற்றுவரும் மோதல்களையும், அவற்றுக்கான காரணங்களையும் இந்த வரைபடம் விளக்குகிறது.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான மனிதநேய நோக்கிலான உதவிகளை வழங்கிவரும் சேவை அமைப்பான இரின், உலகம் மறந்துவிட்ட மோதல்கள் குறித்துக் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. ஆழமான தகவல்களைக் கொண்டுள்ள இந்தத் தொடர் வரிசையில் தற்போது உலகை உலுக்கும் மோதல்களைச் சுட்டிக்காட்டும் இணைய வரைபடத்தை இரின் அமைப்பு உருவாக்கி வெளியிட்டுள்ளது.

இதில் உலக வரைபடத்தில் உள்ள நாடுகளில் மோதல் அல்லது போரால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் சிவப்புப் புள்ளியால் கவனத்தை ஈர்க்கின்றன. மோதல் நடைபெறும் இடத்தை இந்தச் சிவப்புப் புள்ளி குறிக்கிறது. மோதல் எவ்வளவு காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை புள்ளியின் அளவு குறிக்கிறது. சில இடங்களில் சிவப்புப் புள்ளி சற்றுப் பெரிதாக இருப்பதைப் பார்க்கலாம். அந்த இடங்களில் எல்லாம் ஆண்டுக்கணக்கில் மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு புள்ளியையும் கிளிக் செய்தவுடன் மோதல் தொடர்பான மேலதிகத் தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். மோதலுக்கான காரணம், எவ்வளவு காலமாக நடைபெறுகிறது, மோதலின் தற்போதைய நிலை ஆகியவை தனியே பெட்டிச் செய்தியாகத் தோன்றுகின்றன.

மேலும் செய்திகள்