தமிழ் படைப்பாளிகளை கவுரவிக்கும் ‘கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்’

தமிழ் மொழியை வளர்க்கவும், தமிழ் நூல்களை உலக மக்களிடம் கொண்டு சேர்க்கவும் பல அமைப்புகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், ‘கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்’ அமைப்பும், தமிழ் வளர்ச்சி பணிகளில் மும்முரம் காட்டுகிறது.

Update: 2021-11-27 11:59 GMT
கனடா நாட்டில் வாழும் தமிழர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு, தமிழ் மொழியையும், தமிழ் படைப்புகளையும் கொண்டாடுகிறது. அதுபற்றி, அந்த அமைப்பினர் கூட்டாக நம்மிடம் பகிர்ந்து கொண்டவை, இதோ...

எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது?



2001-ம் ஆண்டு முதல், கனடா நாட்டில் இயங்கி வருகிறது. தமிழ் மொழியை வளர்ப்பதற்காகவும், தமிழ் அறிஞர்கள்-படைப்பாளிகளை கவுரவிப்பதற்காகவும் இது உருவாக்கப்பட்டது. உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழர்களை ஒருங்கிணைப்பது, இதன் முக்கிய பணி.

என்னென்ன பணிகளை செய்கிறீர்கள்?

அரிய தமிழ் நூல்களை பதிப்பிப்பது, தமிழ் ஆங்கில நூல்களை மொழிபெயர்ப்பு செய்வது, மொழி பெயர்ப்பாளர்களை ஊக்கப்படுத்துவது, மாணவர் கல்விக்கு உதவித் தொகை வழங்குவது, கனடிய நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்களை அளிப்பது போன்ற பணிகளை முன்னெடுத்திருக்கிறோம். குறிப்பாக தமிழ் மொழிக்கு தொண்டு ஆற்றுபவர்களுக்கு சிறப்பு விருது வழங்கி சிறப்பு செய்கிறோம்.

எதற்காக சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது ?

உலகெங்கிலுமுள்ள தமிழர்களில், தமிழுக்குப் பல்வேறு துறைகளில் சேவை செய்து முத்திரை பதித்தவர்களை கவுரவிக்க, சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. மதிப்புமிக்க விருதுக் கேடயமும், 500 கனடியன் டாலர் பரிசுத்தொகையும் வழங்கப்படுவதுடன், கனடா வந்து செல்வது, தங்குவது என எல்லா சலுகைகளும் இலவசமாக செய்து தரப்படும்.

எத்தகைய விருதுகள் அது?

‘கவிதை’, ‘புனைவு’, ‘இலக்கிய சாதனை சிறப்பு’, ‘பிறமொழி இலக்கியம்’, ‘தமிழ்த் தொண்டு’ என 5 பிரிவுகளில், 5 நபர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இவை தவிர, ஆளுமைகளின் வாழ்நாள் சாதனையை அடையாளப்படுத்தி, ‘இயல்’ விருதும் (2500 டாலர்கள் பணப் பரிசு) வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருதுகள் உலக தமிழர்கள் மத்தியில் கவுரவம் மிக்கதாகவும், பெருமைக்குரியதாகவும் மதிக்கப்படுகிறது.

இதுவரை யாரையெல்லாம் கவுரவப்படுத்தி இருக்கிறீர்கள்?

எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், தியோடர் பாஸ்கரன், ஜெயமோகன், வண்ணதாசன், இமையம், சு.வெங்கடேசன்... இப்படி நிறைய பிரபல எழுத்தாளர்களை கவுரவப்படுத்தி இருக்கிறோம். அதில் பலர் சாகித்ய அகாடமி விருது வென்றவர்கள்.

2021-ம் ஆண்டிற்கான விருது நிகழ்ச்சிகள், கொரோனா காரணமாக ஆன்லைனில் நடைபெற இருக்கிறது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பெருந்தேவி (கவிதை), கண்மணி (புனைவு) ஆகியோருடன் உலக தமிழர்கள் பி.ஜெ.டிலிப்குமார் (இலக்கிய சாதனை சிறப்பு), லோகதாசன் தர்மதுரை (பிறமொழி இலக்கியம்), வீரகத்திசுதர்ஷன் (தமிழ்த்தொண்டு) ஆகியோரும் விருது பெற இருக்கிறார்கள்.

உங்களுடைய தனித்துவமான பணி எது?

‘திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும்’ என்றான் பாரதி.

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறந்த படைப்புகள் வெளிவந்தாலும் அவை பற்றிய அறிதல் வெளிநாடுகளில் இல்லை. இதற்கு காரணம் தமிழில் தரமான மொழிபெயர்ப்புகள் இல்லாததுதான்.

இந்தக் குறையை போக்க அமெரிக்காவில் ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் முக்கியமான பணி நல்ல தமிழ் இலக்கியங்களை கண்டறிந்து, தரமான முறையில் மொழி பெயர்த்து உலகமேடையில் அவற்றை அறியவைப்பது. இந்த முயற்சியில் நாங்களும் முன்னின்று உழைக்கிறோம். சிறந்த தமிழ் படைப்புகளை, சிறந்த எழுத்தாளர்களை கொண்டு மொழி பெயர்த்து வருகிறோம்.

மேலும் செய்திகள்