வீட்டு மாடியில் அமைந்த இயற்கை தோட்டம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த இல்லத்தரசி ஒருவர் தனது வீட்டிலேயே தோட்டம் அமைத்து காய்கறி மற்றும் பழங்களை சாகுபடி செய்து வருகிறார். இதன் மூலம் வீட்டிற்கு தேவையான 98 சதவீதம் உணவுப் பொருட்களை இயற்கை முறையில் பெறுகிறார் என்பதுதான் கவனிக்கத்தகுந்த அம்சம். அவரின் பெயர் பிரதீமா அடிகா.

Update: 2022-01-24 05:57 GMT
சமையல் கலைஞராக இருந்தவர், தற்போது இல்லத்தரசியாக மாறி இருக்கிறார். சமையல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் தோட்டம் அமைத்து இயற்கை முறையில் பராமரித்து வருகிறார். இவரது வீட்டு தோட்டம் 800 சதுர அடி பரப்பளவு கொண்டது. அதில் பூசணிக்காய், உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி உள்பட 15 வகையான காய்கறிகளை விளைவிக்கிறார். ஸ்ட்ராபெர்ரி, லிச்சி போன்ற பழங்களையும் சாகுபடி செய்கிறார். அத்துடன் மஞ்சள், இஞ்சி செடிகளும் இவரது வீட்டு தோட்டத்தில் வளர்கின்றன.

ஊரடங்கு காலத்தில் மட்டும் ஒரே அறுவடையில் 23 கிலோ மஞ்சள் மற்றும் 30 கிலோ அளவிற்கு பூசணிக்காய் விளைந்திருக்கிறது. தோட்டத்தில் விளையும் பொருட்களையே வீட்டு சமையலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார். இதன் மூலம் வீட்டுத் தேவைக்கான 98 சதவீத உணவுப் பொருட்கள் தன்னிறைவாகக் கிடைக்கின்றன என்றும் சொல்கிறார்.

பிரதீமா, வீட்டுத்தோட்டத்தை வருமானம் ஈட்டும் நோக்கத்தோடு அமைக்கவில்லை. ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையில் விளைவித்த உணவுப் பொருட்களை தனது குடும்பத்தினர் சாப்பிட வேண்டும் என்பதே தனது நோக்கம் என்றும் சொல்கிறார். எட்டு வகையான மஞ்சள் உள்ளிட்ட செடிகளைப் பயிரிடவும் திட்டமிட்டுள்ளார்.

காய்கறி, பழங்கள் மட்டுமின்றி துளசி, லெமன் கிராஸ் போன்ற மருத்துவக்குணம் வாய்ந்த செடிகளையும் இவர் வளர்த்து வருகிறார். சமையல் கலைஞராக இருந்தவருக்கு வீட்டிலேயே தோட்டம் அமைக்கும் ஆர்வம் 2016-ம் ஆண்டு ஏற்பட்டிருக்கிறது.

தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இந்த முடிவை எடுத்திருக்கிறார். இதையடுத்து, முறையான பயிற்சியைப் பெற்று இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கிவிட்டார்.

மேலும் செய்திகள்