கழிவுகளில் தயாராகும் அலங்கார பொருட்கள்

ஒரு கதவு மூடினால், மற்றொரு கதவு தானாக திறக்கும் என்பதற்கு மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கைச் சேர்ந்த காயத்ரி ராஜேஷ் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.

Update: 2022-02-27 10:14 GMT
உற்பத்தி துறையில் பணியாற்றிய காயத்ரி, கர்ப்பமடைந்ததும் 9 மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனை பயனுள்ள வழியில் செலவிட முடிவு செய்தவர், தனக்கு பிடித்தமான அலங்கார பொருட்களை தயார் செய்ய தொடங்கி இருக்கிறார். அதனை சமூக ஊடகங்களில் பகிர, அவரது அலங்கார படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரையும் பிரபலப்படுத்திவிட்டது.

29 வயதாகும் காயத்ரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். கர்ப்பிணியாக இருந்த காலத்தில் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து அவரே விவரிக்கிறார்…

“குழந்தை பெற்ற பிறகும் கூட என்னால் தொடர்ந்து 8 மணி முதல் 10 மணி நேரம் வரை பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. தனி ஒருத்தியாக குழந்தையையும் பார்த்து கொள்ள வேண்டியிருந்தது. அதனால் வேலையை ராஜினாமா செய்தேன். வீட்டில் இருந்தபடியே சிறு தொழில்களை செய்வதற்கு முயற்சித்தேன். அதில் என்னால் வெற்றி பெற முடியவில்லை.

எனக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவது ரொம்பப் பிடிக்கும். அதனால் வீணான பழைய பொருட்களில் இருந்து அலங்காரப் பொருட்களை வடிவமைத்தேன். அவற்றை சமூக ஊடகத்திலும் பகிர்ந்தேன். இதற்காக நிறைய நேரத்தை யூடியூப்பில் செலவிட்டேன். என்னிடம் படைப்பாற்றல் திறன் இருந்தாலும் என்னால் அழகிய பொருட்களை தயாரிக்கமுடியும் என்ற நம்பிக்கையில்லை. கடந்த 2019-ம் ஆண்டு ‘கிரியேட்டிவ் டயரி’ என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கினேன். ஆனால், அதில் தீவிரம் காட்டவில்லை.

பின்னர் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு யூடியூப் சேனலில் தீவிர ஆர்வம் காட்டினேன். நானே வீட்டு உபயோகப் பொருட்களைச் செய்ய தொடங்கினேன். பின்பு அந்த பொருட்களை அவ்வப்போது யூடியூப்பில் பகிர்ந்தேன். இதன் மூலம் யூடியூப்பில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரமாக உயர்ந்தது. மேலும், இன்ஸ்டாகிராமில் என்னை 60 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். இதனால் எனக்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கை கழிவுகளில் இருந்துதான் அலங்காரப் பொருட்களை தயாரிக்கிறேன். இவ்வாறு 150 பொருட்களைத் தயாரித்துள்ளேன். எந்தப் பொருளுமே வீண் என்று சொல்லமுடியாது. தற்போது ஆன்லைன் மற்றும் நேரடி விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்பவர் வீட்டில் இருந்தபடியே பணி புரிய விரும்பும் பெண்களுக்கு கூறும் ஆலோசனை இதுதான். ‘‘இலக்கை அடைய விரும்பினால் தொடர்ந்து பயணியுங்கள். பயணத்தில் தடை ஏற்பட்டாலும் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்குங்கள். உங்கள் கனவை நனவாக்க உங்களை வலிமையாக்கி ஒரு படி மேலே செல்லுங்கள்” என்று நம்பிக்கை தருகிறார்.

மேலும் செய்திகள்