குழந்தைகள் திசைமாறுவதை முன்பே கண்டறிவது எப்படி? - டாக்டர் குமணன், மதுரை அரசு ஆஸ்பத்திரி மனநலத்துறை தலைவர்

“ஒவ்வொருவரின் வளர் இளம் பருவம்(12 வயதில் இருந்து 18 வயது வரை) மிகவும் முக்கியமானது. மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளிலும் மாற்றம் ஏற்படும்.

Update: 2022-05-15 09:59 GMT
மூளை பக்குவமடையும். ஹார்மோன் மாற்றங்கள் நடக்கும். அனைவருக்கும் ஒரே மாதிரியான மாற்றமாக இருக்காது. சிலருக்கு ஹார்மோன் சுரப்பது தாமதமாகும். சிலருக்கு வயதுக்கு மீறிய மாற்றம் இருக்கும். இவை மனரீதியான மாற்றங்கள், பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். இந்த நேரத்தில்தான் தன்னிச்சையான செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள். பெரியவர்கள் சொல்வதை கேட்கமாட்டார்கள். அந்தநேரத்தில் குழந்தைகளை மிகவும் கவனமாக வழிநடத்த வேண்டும்.

இந்த வயதில் ஏற்படும் பழக்கங்கள்தான் வளர்ந்தபின்பும் தொடரும். அவ்வப்போது பெற்றோர் கண்டித்தால் பெரும்பாலானவர்கள் மாறிவிடுவார்கள்.

முன்பெல்லாம் கூட்டுக்குடும்ப முறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது வீட்டில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் தனி அக்கறை காட்டினர். பெரியவர்களின் கண்டிப்பினால் சிறியவர்கள் கட்டுபாட்டுடன் இருந்தனர். குறிப்பாக வீடுகளில் ஆபாசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. விஞ்ஞான வளர்ச்சியினால் பாலியல் விஷயங்களை உள்ளங்கையில் உள்ள செல்போன் மூலம் நொடிப்பொழுதில் பெற முடியும். தேவையில்லாத தகவல்களையும் செல்போனில் சிறியவர்கள் தெரிந்து கொள்கிறார்கள்.

தவறான நடவடிக்கை என்பது ஒரு குழந்தையிடம் உடனடியாக வராது. ஓரிரு மாதங்களாகவே இந்த நடவடிக்கை இருக்கும். அதாவது, பள்ளிக்கு ஒழுங்காக செல்லாமல் இருப்பது, நடத்தையில் மாற்றம், தனிமையை விரும்புவது, அடிக்கடி கோபப்படுவது போன்றவற்றை சொல்லலாம். அதை பெற்றோர் கண்காணித்து, காரணத்தை தெரிந்து அவர்களை மாற்ற வேண்டும்.

தற்போது சிறார்கள் குற்றச்சம்பவங்களில் ஈடுபட போதைப்பழக்கம் முக்கியமானதாக உள்ளது. போதைப்பொருள் மூளையை சமநிலையில் வைக்காது. அதனால்தான் போதையில் இருப்பவர்களிடம் கட்டுப்பாடுகள் இருக்காது.

வளர்இளம் பருவம், விடலை பருவத்தில் சமவயது நண்பர்கள் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலை இருக்கும். மற்றவர்கள், தீய வழியை காட்டினாலும் அதில் பயணிக்க தயங்கமாட்டார்கள். இதை பெற்றோர்தான் கவனித்து, திசைதிருப்ப வேண்டும். தண்டனைகள் வீட்டில் கடுமையாக்கப்பட்டால், வெளியுலகத்தில் சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடாமலும், தண்டனையிலிருந்தும் தப்பிக்கலாம். வளர்ச்சி அடைந்த நாடுகளில் பாலியல் தொடர்பான குற்றங்கள் மட்டுமின்றி எந்த குற்றமானாலும் தண்டனை கடுமையாக இருக்கும்.

நம் நாட்டிலும் அதுபோல தண்டனைகளை கடுமையாக்கினால் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. இளம்வயதுக்காரர்களிடம் சொல்லி புரிய வைப்பது கடினம். எனவே தண்டனைகளை கூறி அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம்..

கொரோனா ஊரடங்கின்போது, ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போன் பயன்படுத்தினர். கொரோனா காலகட்டம் முடிந்த பின்னரும் சிறார்கள் அனைவரின் கைகளிலும் செல்போன்கள் இருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு தேவையில்லாமல் இணைய வசதியை ஏற்படுத்தி கொடுத்தால் அதுவும் தவறு செய்ய தூண்டுதலாகிறது.

மனநோய்களால் குற்றங்கள் ஏற்படுவது மிக குறைவு. 18 வயதுக்கு உள்ளானவர்களிடையே ஏற்படும் நடத்தை கோளாறுகளால் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இதனால் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கட்டாயமாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 7 வருடமாக குழந்தைகளுக்கான மனநல மருத்துவத்துறை செயல்பட்டு வருகிறது. அதிக அளவு மன அழுத்தத்துக்கு உள்ளாவதால், குழந்தைகளுக்கு மன நல ஆலோசனை வழங்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.

மன நோயை குணப்படுத்தி விடலாம். ஆனால், செயற்கையாக மனநோய் வந்தால் அதனை சரி செய்வது மிகவும் கடினம். போதை, செல்போன், குடும்பச்சூழல் போன்றவை சிறார்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன. குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதனை அழகாக செய்தால் குடும்பம் இனிக்கும்.

மேலும் செய்திகள்