சின்னத்திரை தொடர்களை அலங்கரிக்கும் இசை..

சீரியல்களுக்கு இசைதான் பலமும், பலவீனமும். இதை உணர்ந்து கொண்டிருப்பதால், காட்சிகளுக்கு பொருத்தமான இசையை ஒன்றுக்கு பலமுறை யோசித்து தேர்வு செய்கிறேன் என்கிறார் சுகந்த் ஜோ.;

Update:2023-03-05 21:14 IST

''ஒரு திரைப்பட, சீரியல் காட்சியை இசை மூலமாக நகைச்சுவை காட்சியாகவும் மாற்ற முடியும். மிகவும் உணர்ச்சிவசப்பட வைக்கும் அழுகை காட்சிகளாகவும் மாற்ற முடியும். காட்சி ஒன்று தான், ஆனால் அதற்கு இரு வேறு தோற்றத்தை-இரு வேறு உணர்ச்சி பெருக்கை உண்டாக்கும் 'சக்தி' இசைக்கு உண்டு'' என்று எதார்த்தமாக பேச ஆரம்பிக்கிறார், சுகந்த் ஜோ.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவரான இவர், சின்னத்திரை வட்டாரத்தில் ஜோ என அறியப்படுவதுடன், பெரும்பாலான தமிழ் சீரியல்களுக்கு இவரே இசை அமைக்கிறார். சன் டி.வி.யின் லட்சுமி ஸ்டோர், அருந்ததி, மகராசி, பூவே உனக்காக, செவ்வந்தி, திருமகள் ஆகிய சீரியல்களுக்கும், ஜீ தமிழின் கண்டுக்கொண்டேன் கண்டுகொண்டேன், பிரியாதவரம் வேண்டும், நாச்சியார்புரம், பேரன்பு போன்ற சீரியல்களுக்கும் இசை அமைத்திருக்கிறார்.

''எனக்கும், இசைக்கும் பெரிய பின்னணி எதுவும் கிடையாது. தேவாலய இசை குழுவில் அங்கம் வகித்து, கீபோர்ட் வாசித்திருக்கிறேன். இசைக்கும் எனக்குமான பந்தம் அவ்வளவுதான் என்றாலும், எந்த சூழ்நிலைக்கு எந்த மாதிரியான இசை பொருத்தமாக இருக்கும் என்ற இசை ஞானம் கொஞ்சம் பிரகாசமாக இருந்தது. அதுதான், என்னை சீரியல்களுக்கு இசை அமைக்கும் வாய்ப்பை பெற்று தந்தது'' என்றவர், தொலைக்காட்சி நண்பர்கள் மூலம் தற்செயலாகவே கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் சீரியலுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். ஆனால் இவரது இசை தேர்வும், இசை கோர்வையும் சீரியல் காட்சிகளுக்கு புத்துயிர் ஊட்ட, அடுத்தடுத்த சீரியல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு பெற்றார். 2018-ம் ஆண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆரம்பமான இசை பயணமும், 10-க்கும் மேற்பட்ட சீரியல்களும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

''இசை துறைக்குள் தற்செயலாக வந்தாலும், இசை அறிவை வளர்த்து என்னை மேம்படுத்தி வருகிறேன். சீரியல்களுக்கு இசைதான் பலமும், பலவீனமும். இதை உணர்ந்து கொண்டிருப்பதால், காட்சிகளுக்கு பொருத்தமான இசையை ஒன்றுக்கு பலமுறை யோசித்து தேர்வு செய்கிறேன். மேலும் சீரியல் காட்சியில் காட்சிப்படுத்தப்படும் சூழல்களுக்கு ஏற்ற இசை வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்துவதால், என்னுடைய இசை பணி தனித்துவமாக தெரிகிறது. தொடர்ச்சியாக, புராஜெக்ட்களும் கிடைக்கிறது'' என்றவர், சின்னத்திரை அனுபவங்களை தொடர்ந்து வெள்ளித்திரை அனுபவத்திற்கும் தயாராகி வருகிறார்.

''சின்னத்திரை மட்டுமல்ல, நிறைய தனிநபர் ஆல்பம் பாடல்களுக்கும், ஆன்மிக பாடல்களுக்கும் இசையமைத்திருக்கிறேன். கூடவே, இசைக்கும் மனித உணர்வுகளுக்குமான தொடர்பை ஆராய்ந்து வருகிறேன். எனது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் அம்மாவுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்'' என்றவர், சின்னத்திரை உலகில் பல விருதுகளையும், கவுரவ பட்டங்களையும் வென்றிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்