சென்னிமலையில் பங்குனி திருவிழா நடைபெற உள்ளநஞ்சுண்டேசுவரர் கோவில் பாதை குண்டும்-குழியுமாக கிடக்கிறது;சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை

சென்னிமலையில் பங்குனி திருவிழா நடைபெற உள்ள நஞ்சுண்டேசுவரர் கோவில் பாதை குண்டும்-குழியுமாக கிடக்கிறது. இதை சீரமைக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.;

Update:2023-03-07 02:20 IST

சென்னிமலையில் பங்குனி திருவிழா நடைபெற உள்ள நஞ்சுண்டேசுவரர் கோவில் பாதை குண்டும்-குழியுமாக கிடக்கிறது. இதை சீரமைக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நஞ்சுண்டேசுவரர் கோவில்

சென்னிமலை அருகே ஊத்துக்குளி ரோட்டில் உள்ளது நஞ்சுண்டாபுரம். இங்கு பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த நஞ்சுண்டேசுவரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் மற்றும் கார்த்திகை மாதத்தில் வரும் 2-வது திங்கட்கிழமைகளில் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி அடுத்த மாதம் பங்குனி மாதம் என்பதால் அன்றைய திங்கட்கிழமை நாட்களில் ஏராளமான வாகனங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் இந்த கோவிலுக்கு செல்ல சென்னிமலை- ஊத்துக்குளி ரோட்டில் ஆலமரம் என்ற இடத்தில் இருந்து கோவில் வரை உள்ள சாலை முற்றிலுமாக சிதைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

நீண்டநாள் கோரிக்கை

பங்குனி மாத திருவிழாவில் கலந்துகொள்ள ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன்களில் வந்து விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பக்தர்களின் வசதிக்காக சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்படுவது உண்டு. ஆனால் பக்தர்களின் வசதிக்கேற்ப சாலை வசதி இல்லை. திருவிழா நாட்களில் ஏராளமான வாகனங்கள் வருவதால் சாலை முழுக்க ஒரே புகை மண்டலமாக காட்சியளிக்கும். இதனால் வெளியூர் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

எனவே நஞ்சுண்டேசுவரர் கோவிலுக்கு வரும் சாலையை உடனடியாக சீரமைத்து தார் சாலையாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதுபற்றி அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-

வேதனை

சென்னிமலை காட்டூரை சேர்ந்த ரேவதி மோகன்:-

நஞ்சுண்டேசுவரர் கோவிலில் நடைபெறும் பங்குனி மாத திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வருவார்கள். ஆனால் கோவிலுக்கு செல்லும் தார் சாலை மிகவும் பழுதடைந்து விட்டதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர். இதனால் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

புகை மண்டலம்

சென்னிமலையை சேர்ந்த சுமதி மூர்த்தி:-

நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் விரதம் இருந்து நஞ்சுண்டேசுவரர் கோவிலுக்கு பங்குனி மாதத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோம். ஆனால் தார் சாலை பழுதடைந்து கிடப்பதால் சாலை முழுக்க புகை மண்டலமாக காட்சியளிக்கும். இதனால் வாகனங்களில் செல்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனவே பக்தர்களின் நலன் கருதி உடனடியாக பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

கழிப்பறை-குடிநீர்

நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த விவசாயி யு.சுப்பிரமணியம்:-

நஞ்சுண்டேசுவரர் கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்பாக உருவானது. கண் மற்றும் தோல் நோய் உள்ளவர்கள் விரதம் இருந்து நஞ்சுண்டேசுவரரை வணங்கினால் நோய் குணமாகும் என்பது ஐதீகமாக உள்ளது.

பங்குனி மாதத்தில் பக்தர்கள் விரதம் இருந்து விடிய, விடிய வரிசையில் நின்று இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கோவிலுக்கு செல்லும் பாதை மிகவும் பழுதடைந்து விட்டதால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். நள்ளிரவு 2 மணிக்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடுகின்றனர். ஆனால் கோவிலில் உள்ள கழிப்பறைகள் பயன்படாமல் உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் குடிநீர் வசதியும் போதுமானதாக இல்லை. அதனால் நஞ்சுண்டேசுவரர் கோவிலுக்கு செல்லும் தார் சாலையை பராமரிப்பதுடன் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும்.

10 வருடங்களாக...

சென்னிமலை அருகே சில்லாங்காட்டுவலசை சேர்ந்த கல்லூரி மாணவி எஸ்.சுதர்ஷனா கூறியதாவது:-

நஞ்சுண்டேசுவரர் கோவிலில் நடைபெறும் பங்குனி மாத திருவிழாவுக்கு நான் சிறு வயது முதல் குடும்பத்தோடு சென்று வருகிறேன். ஆனால் கடந்த 10 வருடங்களாகவே கோவிலுக்கு செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. திருவிழா சமயத்தில் சாலை முழுவதும் புகை மண்டலமாகவும், கற் குவியல்கலாகவும் இருக்கும். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்