இனிப்பான, சுவையான அலங்காரம்
இந்தியாவில் திருமணங்கள் பல சடங்குகளை உள்ளடக்கிய பிரமாண்டமான விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளில் அழகாகவும், வித்தியாசமாகவும் இருக்க விரும்புகிறார்கள்.;
திருமண மண்டபத்தின் அலங்காரம் முதல் உணவு வரை பல திட்டங்கள் புதுமையாக இருக்க முயற்சி எடுக்கிறார்கள். அதிலும் மணமகள் அலங்காரம் அதிக கவனம் பெறுவது வழக்கம். ஏனெனில், ஒவ்வொரு பெண்ணுக்கும் திருமண நாள் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத திருநாளாக கருதப்படுகிறது.
எந்தெந்த நிகழ்ச்சிக்கு எப்படி தயாராக வேண்டும்?, என்ன மாதிரியான உடை, நகைகளை அணிய வேண்டும் என்று மணமகள் பல நாள்களாக திட்டமிடுவார். அவ்வாறு நடத்தப்படும் சிலருடைய திருமணங்கள் வைரலாகும். இதே டிரெண்டை பின்பற்றி மணமகள் ஒருவர், தனது திருமண நிகழ்வு ஒன்றில் வித்தியாசமான சிகை அலங்காரங்களை முயற்சி செய்து வெற்றி கண்டு இருக்கிறார். இவர் தனது ஹேர் ஸ்டைலுக்கு பூக்களுக்கு பதிலாக சாக்லேட்டுகளை பயன்படுத்தியுள்ளார். முழு சிகை அலங்காரமும், பூக்களுக்கு பதிலாக சாக்லேட், மிட்டாய்களால் செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு மேக்கப் ஆர்டிஸ்டாக சித்ரா என்பவர் இருந்துள்ளார். சிகை அலங்காரம் செய்ய பல்வேறு பிராண்டுகளின் சாக்லேட்டுகளை தேர்வு செய்துள்ளனர்.மணமகள் தனது மஞ்சள் நிற ஆடைக்கு ஏற்ப மாம்பழ மிட்டாய்களை காதில் காதணிகளாக அணிந்து, அழகுக்கு அழகு சேர்த்து இருக்கிறார்.
அவரது ஒட்டியாணம், நெக்லஸ் ஆகியவையும் சாக்லேட்களால் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதுடன், பலரது பாராட்டுகளையும் பெற்றது.