மனதை பாதுகாக்கும் 3-30-300 பசுமை விதி
பசுமையான பகுதிகளில் வாழ்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும், போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்தவும் உதவும் என்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.;
இது தொடர்பான ஆய்வை ஸ்பெயினை சேர்ந்த சுகாதார நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. ஆய்வில் பங்கேற்றவர்களிடம் 3-30-300 என்ற பசுமை விதியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் இருந்து குறைந்த பட்சம் 3 மரங்களை பார்க்க வேண்டும். தரையில் வெயில் படராதபடி மரத்தின் கிளைகள், இலைகள் அடர்த்தியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 30 சதவீதமாவது மரக்கிளைகள் அடர்த்தியாக அமைந்திருக்க வேண்டும். பூங்காவோ அல்லது மரங்கள் நெருக்கமாக அமைந்திருக்கும் சூழலோ வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கக்கூடாது.
குறைந்தபட்சம் வீட்டில் இருந்து பார்க்கும்போது ஆங்காங்கே மரங்கள், செடி, கொடிகளுடன் பசுமையான சூழல் பரவி இருக்க வேண்டும். அப்படி 3-30-300 விதிக்கு பொருந்தக்கூடிய இயற்கையானசூழலில் வசிப்பவர்களின் மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மன நல ஆலோசகர்களை நாடுவது ரொம்பவே குறைவாக இருக்கும் என்பதும்ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட சூழல் இல்லாதபட்சத்தில் குடியிருப்பை சுற்றியோ, வீட்டு ஜன்னலில் இருந்து பார்க்கும் தூரத்திலோ மரங்கள் தெரிவது அல்லது பசுமையான சூழல் நிலவுவது மன நலத்துடன் நெருங்கிய தொடர்புடையது என்பதை உளவியலாளர்களும் ஆமோதித்துள்ளனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 4.7 சதவீதம் பேருக்கு மட்டுமே 3-30-300 பசுமை விதியை பின்பற்றி வாழும் சூழல் அமைந்திருக்கிறது. 45 சதவீதம் பேர் தங்கள் வீட்டில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் குறைந்தபட்சம் 3 மரங்களை பார்க்க முடிவதாக கூறி உள்ளனர்.
வீட்டின் அருகில் மரங்கள் இல்லாவிட்டாலும் கூட 62.1 சதவீதம் பேர் 300 மீட்டர் தூரத்தில் பசுமையான பகுதியை பார்க்க முடிவதாக குறிப்பிட்டுள்ளனர். எனினும் 8.7 சதவீதம் பேர் மட்டுமே சுற்றுப்புறம் முழுவதும் வாழ்வதற்கு உகந்த பசுமை பகுதியில் குடியிருக்கிறார்கள். 22.4 சதவீதம் பேர் 3-30-300 பசுமை விதி பற்றிய சூழலை உணரவில்லை என்று கூறி இருக்கிறார்கள்.
வீட்டிற்கு அருகில் மட்டுமல்ல வீட்டின் சுற்றுச்சுவர் பகுதிக்குள்ளும் மரங்கள் வளர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. ஒவ்வொருவரும் வீட்டில் மரங்கள் வளர்க்க தொடங்கினாலே தங்கள் சுற்றுப்புற பகுதியில் இயல்பாகவே பசுமையை உணர முடியும், புவி வெப்பமயமாதல் தடுக்கப்படும், இயற்கை பாதுகாக்கப்படும் என்று ஆய்வாளர்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.