மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக கார் - சிங்கெர் 21சி..!
அமெரிக்காவின் சிங்கெர் நிறுவனம் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய காரை தயாரித்துள்ளது. மணிக்கு 253 மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.;
Image Credit:www.nytimes.com / goodwood.com
நியூயார்க்,
அமெரிக்காவின் சிங்கெர் நிறுவனம் மணிக்கு 400 கி.மீ. வேகத்தில் பயணிக்க கூடிய காரை தயாரித்துள்ளது.
சிங்கெர் வாகனங்களின் பெரும்பான்மையான உரிமையை 'டிவர்ஜென்ட் டெக்னாலஜிஸ்' கொண்டுள்ளது. இவை கூட்டாக இணைந்து, நான்கு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் காரை விரைவில் உற்பத்தி செய்யும் பணியில் இறங்கியுள்ளன.
சிங்கெர் 21சி என்ற இந்த கார் மணிக்கு 253 மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. பிரபல கார் தயாரிப்பாளர்களான பெராரி, மெக்லாரன், லம்போர்கினி, பென்ட்லி போன்ற கார்களின் போட்டியாளராக இந்த கார் அமையும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் 3-டி பிரிண்டிங் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் போல 2 பேர் அமர்ந்து இதில் பயணிக்கலாம். அடுத்த ஆண்டு முதல் அமெரிக்க சந்தையில் ரூ.1.60 கோடி விலையில் அறிமுகமாக உள்ளது.
மின்சாரம் மற்றும் பெட்ரோலில் இயங்கக்கூடிய இந்த கார் வெறும் இரண்டே வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடும் ஆற்றல் மிகுந்த என்ஜினை கொண்டுள்ளது. அதன் கலப்பின இரட்டை-டர்போ வி-8 என்ஜினிலிருந்து 1,200 பி.எஸ் அதாவது 883 கிலோ வாட் சக்தி வெளியாகும்.
இந்த காரில் ஒரேயொரு லித்தியம்-டைட்டனேட் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், இரண்டு மின்சார மோட்டார்கள் இயக்கப்படுகின்றன. பேட்டரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் மின்சாரம் மூலம் குறுகிய தூரம் பயணிக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மற்றும் நிறுவனர் கெவின் சிங்கெரின் கூற்றுப்படி, 21-சி கார்கள் தயாரிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் விநியோகம் தொடங்கும். அமெரிக்காவில் ஏழு இடங்களிலும், சர்வதேச அளவில் டோக்கியோ, பிராங்பர்ட் மற்றும் பார்சிலோனா உள்ளிட்ட ஆறு இடங்களில் விற்பனை மையங்கள் உள்ளன.