கிடைக்கப்பெறாத கிழங்கு வகைகள்... கண்டிராத காய்கறிகள்... அரிய அரிசி ரகங்கள்...

பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு புதிய முயற்சியை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.;

Update:2023-03-10 19:00 IST

உணவே மருந்து மருந்தே உணவு, என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் மருந்து, மாத்திரைகளை உணவாக உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளில் சமையல் அறைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. சமையல் செய்ய சோம்பேறித்தனம் கொண்டு கடைகளில் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிட்டு நோய்களை பலர் விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். பாரம்பரிய காய்கறிகள் பயன்பாடும் அழிந்து வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை என்பது இல்லாமல் நோய்களோடு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றவும், மரபு காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள், விதைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு புதிய முயற்சியை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

மரபு காய்கறிகள், கிழங்குகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டமைப்பினர் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் மரபு காய்கறிகள் திருவிழா மற்றும் கண்காட்சியை ஏற்படுத்தினர். அதுகுறித்த தகவலை இங்கு காண்போம்.

மரபு காய்கறிகள் மற்றும் விதைகளை தமிழகம் முழுவதும் தன்னார்வலர்கள் பலர் சேகரித்து வருகின்றனர். அவ்வாறு செயல்படும் நபர்களை ஒருங்கிணைத்து மரபு காய்கறிகள், கிழங்கு வகைகள் உள்ளிட்டவற்றை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது.

இதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அங்குள்ள விவசாய முறைகள் குறித்தும், காய்கறிகள், கிழங்குகள் சாகுபடி குறித்தும் ஆராய்ச்சி செய்வார்கள். இவ்வாறு கிராமம் தோறும் சென்று விவசாயிகளிடம் மரபு காய்கறிகள் குறித்து தகவல் பரிமாறி அவர்களிடம் விதைகள் சேகரிப்பார்கள்.

இதுவரை சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளனர். அதன் மூலம் சேகரிக்கும் விதைகளை பயிரிட்டு, அதிகப்படியாக விதைகள் பெற்று, ஆர்வமுள்ள சேகரிப்பாளர்களிடம் கொடுத்து இந்த விதைகளை பாதுகாத்து வருகின்றனர். இதை மக்களிடையே கொண்டு சேர்த்து, பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் வகையில் முதன் முதலாக இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அரிய காய்கறி ரகங்கள்

கண்காட்சியில் பாரம்பரியம் சார்ந்த காய்கறிகள், விதைகள், கசாயம், மூலிகை, பழக்கூழ், பானைகள் விற்பனை செய்ய 70-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு பாரம்பரிய காய்கறி விதைகள், அரிசிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றை பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்த கண்காட்சியில் 500 ரகங்களுக்கு மேல் காய்கறிகளின் அரிய ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் ஏராளமான பாரம்பரிய அரிசி வகைகளும், 100-க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளும் இடம் பெற்றிருந்தன. அவற்றின் வகைகள் குறித்த பெயர்கள், பயன்கள் பற்றி பொதுமக்களுக்கு கூட்டமைப்பினர் விளக்கி கூறினர்.

கிழங்கு வகைகள்

நன கிழங்கு, சிறு கிழங்கு, சிறுவள்ளி கிழங்கு, சேனை வெற்றிலை வள்ளி கிழங்கு, முள்ளன் கிழங்கு, வடக்கன் கிழங்கு, ஆப்ரிக்கன் வெற்றிலை வள்ளி கிழங்கு, காட்டு வள்ளி கிழங்கு, கடுவா வெற்றிலை வள்ளி கிழங்கு, மகாகாளி கிழங்கு, கூகை கிழங்கு, ரோர்ந்தை கிழங்கு போன்ற 30 வகையான கிழங்குகள் இருந்தது. இதில் சுமார் 103 கிலோ எடை கொண்ட 2½ ஆண்டுகள் பயிர் கொண்ட வெற்றிலை வள்ளி கிழங்கும் இடம்பெற்றிருந்தது. இதுதவிர கொடியில் காய்க்கும் கொடி உருளையும் இடம் பெற்றிருந்தது. பல கிழங்குகள் செடியுடன் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

கத்தரிக்காய்

கட்டங்கத்தரி, தற்போது புவிசார் குறியீடு பெற்ற வேலூர் மாவட்டத்தின் இலவம்பாடி முள்கத்தரி, கோவை வரி கத்தரி, கொட்டாம்பட்டி கத்தரி, புளியம்பூ கத்தரி, ஊதா கொத்து கத்தரி என 50-க்கும் மேற்பட்ட கத்தரி வகைகள் இருந்தது.

சேலம் முள் கத்தரிக்காய் பெரிய அளவில் இருந்தது. ஆனால் சுமார் 400 கிராம் எடை உடையதாக ஆண்டாள்குளம் கத்தரிக்காய் இருந்தது.

அவரைக்காய்

பச்சை நிற அவரை, ஊதா மூக்குத்தி அவரை, பட்டாணி அவரை, சிறிய பச்சை பட்டாணி அவரை, சிவப்பு மொச்சை, பச்சை வாட பட்ட அவரை, பச்சை வாட செடி அவரை, பச்சை பெரிய அவரை, சிறகு அவரை, கர்லா கட்டை அவரை உள்ளிட்ட 40 வகை அவரைகளும் இருந்தது.

மிளகாய்

ஊதாநெய் மிளகாய், காந்தாரி மிளகாய், சம்மா மிளகாய், மாங்காய் மிளகாய், கருப்பு மிளகாய், பறவை கண் மிளகாய், இருநிற மிளகாய், பெல்லாரி நீள மிளகாய், புல்லட் மிளகாய் என 60 வகையான மிளகாய் வகைகள் இருந்தது. மேலும் அந்த மிளகாய்கள் வளரும் செடிகளும் அங்கு தொட்டியுடன் வைக்கப்பட்டிருந்தது.

வெண்டை

யானைதந்த வெண்டை, பருமன் வெண்டை, இருநிற பருமன் வெண்டை, உருட்டு வெண்டை, விருதுநகர் வெண்டை, பச்சை வெண்டை, கஸ்தூரி வெண்டை என 40-க்கும் மேற்பட்ட வெண்டை ரகங்கள் இருந்தது. பட்டை கொத்து வெண்டை, காபி வெண்டை, பட்டை தஞ்சாவூர் வெண்டை, முள் வெண்டை, பட்டை கூர்முனை வெண்டை, அடர்பச்சை வெண்டை உள்ளிட்ட அரிய வகை வெண்டைகளும் இருந்தது. இதில் ஒரு அடி நீளம் வளரக்கூடிய சிவப்பு நிற வெண்டையை பலர் ஆச்சரியமுடன் பார்த்தனர்.

கீரை வகைகள்

கொல்லிமலை இஞ்சி, காட்டு இஞ்சி உள்ளிட்ட நாம் அறிந்திராத இஞ்சி வகைகளும் இடம் பெற்றிருந்தது. மூலிகை செடிகள் வைக்கப்பட்டு மூலிகை கண்காட்சியும் நடந்தது. கீரை வகைகள், தினை வகைகள், சோளம் வகைகள், 30 பீர்க்கங்காய் வகைகள், 60 பூசணி வகைகள், 60 சுரைக்காய் வகைகளும் கண்காட்சியில் இருந்தது. பீர்க்கங்காயை பொறுத்தவரையில் கொத்து பீர்க்கங்காய், உறுதி பீர்கங்காய், பாம்பு பீர்க்கங்காய் மக்களை கவர்ந்தது.

சுரைக்காயை பொறுத்தவரையில் லிங்க சுரைக்காய், வரிச்சுரைக்காய், சட்ட சுரைக்காய், கும்ப சுரைக்காய், மயில் கழுத்து சுரைக்காய், மகுடி சுரைக்காய் போன்றவை மக்களை கவர்ந்தன. இந்த சுரைக்காய்களில் 30-க்கும் மேற்பட்ட சுரைக்காய்கள் குடுவை வடிவில் வைக்கப்பட்டிருந்தது. அதில் கலைநுட்பத்துடன் புத்தர் உருவமும் பொறிக்கப்பட்டிருந்தது.

அரிசி வகைகள்

மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, மைசூர் சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா, ஆற்காடு கிச்சலி சம்பா, காட்டு யானம், கரும் குருவை, தூயமல்லி, வாசனை சீரக சம்பா, பூங்கார், குள்ளங்கார், செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, மணி சம்பா, ரத்தசாலி, பால்குடை, கொத்தமல்லி சம்பா உள்ளிட்ட அரிய வகை அரிசி வகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

பனை ஓலையில் அணிகலன்கள்

கம்மல், நெத்திச்சுட்டி, ஒட்டியாணம், செயின், ஜடைமாட்டி உள்ளிட்டவைகள் பனை ஓலையில் நுட்பத்துடன் செய்யப்பட்டிருந்தது.

இயற்கை விவசாயம்

மறைந்த இயற்கை விவசாயி நம்மாழ்வாரை போற்றும் வகையில் அவரது படத்துடன் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. அதில் பப்பாளியை வெட்டி அதில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வைத்திருந்தனர். மேலும் இயற்கை உரம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் தன்னார்வலர்கள் எடுத்துக் கூறினர்.

மேலும் அங்கு சூரியகாந்தி விதைகள் மற்றும் தானிய வகை விதைகளும், சிகப்பு நிற சோளமும், பானைகளில் நெற்பயிர்கள், இயற்கை உரத்தில் முளைத்த நாற்றுகள் போன்றவற்றையும் வைத்திருந்தனர்.

இந்த கண்காட்சியில் நாம் மறந்து போன மரபுகள், பராம்பரிய விதைகள், வேளாண்மை குறித்து பிரியா, தமிழ்பிரியா, சிவாஜி, பிரதீப், ராஜசேகர், ஏங்கல்ஸ் ராஜா உள்பட பலர் விளக்கி கூறினர். விழா மேடை மற்றும் ஆங்காங்கே காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் பார்வையிட வந்திருந்தனர். மேலும் இயற்கை விவசாயத்தில் நாட்டம் கொண்ட படித்த பட்டதாரிகளும் கலந்து கொண்டு காய்கறிகளை புகைப்படம் எடுத்து விதைகளை வாங்கிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்