நிதிநிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த நிதி நிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.;
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பலாத்காரம் செய்த நிதி நிறுவன மேலாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மகளிர் குழு தலைவி
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 35 வயதான பெண் கோவையில் தனியாக குடியிருந்து டெய்லராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திருமணமாக வில்லை. மேலும் அவர் மகளிர் சுய உதவிக்குழு தலைவியாகவும் இருந்து வருகிறார்.
இதனால் அவர் தனது குழுவுக்கு கடன் வாங்குவது தொடர்பாக அடிக்கடி கோவை ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் நிதி நிறுவ னத்துக்கு செல்வது வழக்கம். அப்போது அவருக்கு, அங்கு மேலாளராக வேலை பார்த்த ஒண்டிப்புதூரை சேர்ந்த பரமசிவம் (வயது 40) என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.
செல்போனில் பேசினார்
இதனால் அந்த பெண் பரமசிவத்துடன் சகஜமாக பேசி வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்ட பரமசிவம், நீ யாரையும் திருமணம் செய்ய வேண்டாம், நாம் அடிக்கடி ஜாலியாக இருக்கலாம் என்று கூறி உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுபோன்று என்னுடன் பேச வேண்டாம் என்றுக்கூறி இணைப்பை துண்டித்து விட்டார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ந் தேதி இரவில் அந்த பெண் தனது வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அங்கு வந்த பரமசிவம் திடீரென்று அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்தார். இது குறித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பரமசிவத்தை கைது செய்தனர்.
10 ஆண்டு சிறை
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடை பெற்றது. அரசு தரப்பில் வக்கீல் ஜிஷா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு கூறினார். இதையடுத்து போலீசார் பரமசிவத்தை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.