பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு - கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.;
கோப்புப்படம்
சென்னை,
தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தாலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை புயல் கரையை கடந்த நாளில் இருந்து இன்னும் மழை பொழிந்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருது 10,000 கன அடி உபரி நீர் திறந்து விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 12,000 கன அடியாக அதிகரித்து வருவதால் நீர் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.