`நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 106 பேர் தேர்ச்சி

`நீட்' தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 106 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Update: 2023-06-15 20:13 GMT

`நீட்' தேர்வு

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் கடந்த மே 7-ந் தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவு சமீபத்தில் வெளியானது.

106 பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் 220 அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இதில் 106 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முசிறி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.ஸ்ரீதர் 472 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் 4 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 7 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்துள்ளனர்.

இதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 58 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருச்சி சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.ஐஸ்வர்யா 556 மதிப்பெண்கள் பெற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். திருச்சி மாவட்டத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிக்க அரசு பள்ளியில் இருந்து 25-க்கும் மேற்பட்டோர் தேர்வாக வாய்ப்புள்ளது. நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்