கேளம்பாக்கத்தில் ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு

கேளம்பாக்கத்தில் ஏரியில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-16 09:51 GMT

குளிக்க சென்றார்

கேளம்பாக்கம் வினோத் நகர் பகுதியை சேர்ந்தவர் அரிதாஸ். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் மாதேஷ் (வயது 16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது 11, 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு, அரசு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருவதால், 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாதேஷ் தனது நண்பர்களான ஏகாட்டூரை சேர்ந்த அசோக் (வயது 16), கேளம்பாக்கம் ஜோதி நகரை சேர்ந்த சுமரன் (16), சாத்தங்குப்பத்தை சேர்ந்த அரவிந்த் (16) ஆகியோருடன் படூர் புறவழிச்சாலையில் உள்ள தாங்கல் ஏரியில் குளிக்க சென்றார்.

சாவு

நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்தபோது மாதேஷ், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கினார்.

அவர் வெளியே வராததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கிழக்கு கற்கரை புறவழிச்சாலைக்கு வந்து கூச்சலிட்டனர். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் இறங்கி மாதேஷை மீட்டு, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாதேஷ் மூச்சுத்திணறி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரி சார்பில் கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மாதேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்