ஒரே நாளில் 11 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டது

வேட்டங்குடி ஜீவா நகரில் ஒரே நாளில் 11 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டது அமைச்சர் மெய்யநாதனுக்கு, கிராமமக்கள் நன்றி

Update: 2022-11-24 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியை சேர்ந்த ஜீவாநகரில் கடந்த 11-ந்தேதி பெய்த கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டனர். அப்போது ஜீவாநகரில் பழமையான மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் இருந்து வந்தது. இதனால் அப்பகுதிக்கு அடிக்கடி மின்சாரம் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வெள்ளம் பாதிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேட்டங்குடி ஊராட்சியில் உள்ள ஜீவாநகரில் உள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அங்குள்ளவர்கள் பழமையான 5 மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டு கிராமத்திற்கு நேரில் வரவழைத்து புதிதாக 11 மின்கம்பங்கள் ஜீவா நகரில் நடப்பட்டு மின்கம்பிகள் பொருத்தப்பட்டு புதிய மின்விளக்குகளும் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டார். அதன்பேரில் ஒரே நாளில் நேற்றுமுன்தினம் ஜீவா நகரில் 11 மின்கம்பங்கள் புதிதாக நடப்பட்டு மின் கம்பிகளும், மின்விளக்குகளும் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டன. உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றிய அமைச்சர் மெய்யநாதனுக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் அங்குதன் மற்றும் ஜீவா நகர் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்