ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 11,260 பேர் சிக்கினர்

Update: 2023-03-06 19:38 GMT

சூரமங்கலம்:-

சேலம் கோட்டத்தில் கடந்த மாதம் ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம்செய்த 11,260 பேரிடம் ரூ.74 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ரெயில்களில் சோதனை

சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ரெயில்களில் விதிமுறைகளை மீறி பயணம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட குழுவினர் கடந்த மாதம் ரெயில்களில் சோதனை செய்தனர்.

அப்போது ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 11 ஆயிரத்து 260 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.74 லட்சத்து 38 ஆயிரத்து 250 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல் உரிய டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த 4 ஆயிரத்து 920 பேரிடம் இருந்து ரூ.23 லட்சத்து 915 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ரூ.97½ லட்சம் அபராதம்

மேலும் ரெயில்களில் அனுமதிக்கப்பட்ட லக்கேஜூகளுக்கு பதில் கூடுதலாகவும், லக்கேஜூக்கான டிக்கெட் எடுக்காமலும் கொண்டு சென்ற 40 பேருக்கு ரூ.20 ஆயிரத்து 469 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த மாதம் ரெயில்களில் விதிமுறைகளை மீறியதாக மொத்தம் 16 ஆயிரத்து 220 பேரிடம் இருந்து ரூ.97 லட்சத்து 59 ஆயிரத்து 634 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

ரெயில்களில் பயணம் செய்பவர்கள் உரிய டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும். முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுத்து விட்டு, முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று ரெயில்வே கோட்ட முதிநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்