அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 15,373 மாணவிகளுக்கு பட்டம்

கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில், 15 ஆயிரத்து 373 மாணவிகளுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கினார்.

Update: 2023-08-31 17:10 GMT

15 ஆயிரத்து 373 மாணவிகள்

கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அட்டுவம்பட்டியில், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் உள்ள பாவையர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அதன்படி மொத்தம் 15 ஆயிரத்து 373 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. இதில் 785 மாணவிகளுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்கினார். குறிப்பாக 40 மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கல்வித்துறை செயலாளர் கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பெண்கள் முன்னேற்றம்

விழாவுக்கு புதுடெல்லி அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி மன்ற தலைமை இயக்குனர் மற்றும் செயலாளரான கலைச்செல்வி முன்னிலை வகித்து, பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ் மீடியத்தில் படித்த நான் தற்போது உயர்ந்த நிலைக்கு வந்துள்ளேன். எனவே தமிழில் படிக்கும் மாணவிகள் தாழ்வு மனப்பான்மை கொள்ளக்கூடாது. அன்னை தெரசாவின் பெயரை சூட்டியுள்ள இந்த பல்கலைக்கழகம், பெண்களின் முன்னேற்றம் மற்றும் கல்விக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.

பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சி மூலம், உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைப்பதற்கு மாணவிகள் பெரிதும் பாடுபட்டனர். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கு ஏற்ப ஆசிரியர்களை மதிக்க மாணவிகள் கற்று கொள்ள வேண்டும்.

சந்திரயான்-3 வெற்றி

உயர்கல்வி படித்துவிட்டு, வீட்டில் இருக்காமல் நாட்டுக்கு ஏதாவது செய்வதற்கு மாணவிகள் முயற்சி செய்ய வேண்டும். சந்திரயான்-3 வெற்றியின் மூலம் உலக நாடுகளை இந்தியா திரும்பி பார்க்க செய்துள்ளது. உலக நாடுகளிலேயே இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதற்கு மாணவிகள் முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கலா சேதுபதி வரவேற்றார். இ.பெ. செந்தில்குமார் எம்.எல்.ஏ., கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், ஒன்றியக்குழு தலைவர் சுவேதாராணி கணேசன், வில்பட்டி ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி ராமச்சந்திரன், துணைத் தலைவர் வாசு மற்றும் பேராசிரியைகள், மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பதிவாளர் ஷீலா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்