வீடு புகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் கைது

கேரளாவில் வீடுபுகுந்து நகை, பணம் திருடிய 2 பேர் புளியரையில் பிடிபட்டனர்.

Update: 2022-11-24 18:45 GMT

செங்கோட்டை:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை 2 மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பின்னர் அவர்கள், திருவனந்தபுரம் அருகே சாத்தனூரில் பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து, அங்கிருந்த 4½ பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்தை திருடிச் சென்றனர். பின்னர் அவர்கள், திருடிய மோட்டார் சைக்கிளை ஓரிடத்தில் விட்டு விட்டு, தென்காசி செல்லும் பஸ்சில் ஏறி சென்றனர். இதுகுறித்து கேரள மாநில போலீசார், தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து புளியரை சோதனைச்சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்தனர்.

அப்போது கொல்லத்தில் இருந்து தென்காசிக்கு வந்த பஸ்சில் சந்தேகப்படும்படியாக இருந்த 2 நபர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மதுரை அருகே ஆரப்பாளையம் பட்டுதோப்பு பகுதியைச் சேர்ந்த சோனையன் மகன் பட்டறை சுரேஷ் (வயது 35), தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த ராஜாமணி மகன் எட்வின்ராஜ் (36) என்பதும், அவர்கள் 2 பேரும் கேரளாவில் மோட்டார் சைக்கிள் மற்றும் வீடுபுகுந்து நகைகள், பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து நகைகள், பணத்தை மீட்டனர். திருட்டுக்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் கத்தி, கடப்பாரை போன்ற ஆயுதங்களையும் கைப்பற்றினர். திருட்டு நடந்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்ட இருமாநில போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்