மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2023-09-13 18:45 GMT

கடலூர் தாழங்குடாவை சேர்ந்தவர் மதியழகன் (வயது 48). இவரது மனைவி சாந்தி. இவர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். கடந்த ஜூன் 27-ந் தேதி மதியழகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தாழங்குடாவை சேர்ந்த ராமானுஜம், குருநாதன் உள்ளிட்ட 19 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி (45), பிரகலாதன் (38) ஆகியோர் சிதம்பரம் சி.முட்லூரில் உள்ள 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும், தாழங்குடாவை சேர்ந்த ராஜேந்திரன் (63), ராமலிங்கம் (57) ஆகியோர் பண்ருட்டி நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர். இதையடுத்து அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இதற்கிடையே ராமானுஜம் (50), குருநாதன் (40) ஆகியோரது குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தில் ராமானுஜம், குருநாதன் ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமானுஜம், குருநாதன் ஆகியோரிடம், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது. இவ்வழக்கில் தொடர்புடைய மாசிலாமணி, பிரகலாதன், தினேஷ், அறிவு என்கிற ஆறுமுகம், விஜய், சஞ்சய்குமார் ஆகிய 6 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்