ரெயிலில் அடிபட்டு 2 புள்ளிமான்கள் சாவு
மானாமதுரை அருகே ரெயிலில் அடிபட்டு 2 புள்ளிமான்கள் இறந்தன.;
மானாமதுரை
மானாமதுரை அருகே ரெயிலில் அடிபட்டு 2 புள்ளிமான்கள் இறந்தன.
புள்ளி மான்கள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள காட்டு பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இந்த மான்கள் அவ்வப்போது இரை மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள ஊருக்குள் வருவது வழக்கம். இவ்வாறு வரும் மான்கள் தெருநாய்கள் கடித்தும், வாகனங்கள் மோதியும் இறக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் 2 புள்ளிமான்கள் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து மானாமதுரை அருகே கிருங்காக்கோட்டை ரெயில்வே தண்டவாள பகுதியை கடக்க முயன்றன.
ரெயில்மோதி சாவு
அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி 2 புள்ளி மான்களும் தூக்கி வீசப்பட்டன. இதில் படுகாயம் அடைந்த அந்த புள்ளி மான்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த மான்களின் உடல்களை கைப்பற்றி டாக்டர்கள் மூலம் அங்கேயே பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர். தற்போது காட்டுப்பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் ஊருக்குள் வரும்போது மான்கள் ரெயிலில் அடிபட்டு இறக்கும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. எனவே, காட்டுப்பகுதியல் தண்ணீர் தொட்டி அமைத்து மான்களை பாதுகாக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.