15 நாட்களில் 200 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின

கொள்ளிடம் அருகே கடலோர பகுதியில் 15 நாட்களில் 200 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. அரிய வகை இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-03-18 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கடலோர பகுதியில் 15 நாட்களில் 200 ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. அரிய வகை இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

ஆலிவர் ரெட்லி ஆமைகள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கடலோர கிராமங்களில் ஆண்டு தோறும் இனப்பெருக்கத்துக்காக முட்டை இடுவதற்கு ஆலிவர் ரெட்லி ஆமைகள் வருகின்றன. இவை மணல் பகுதியில் முட்டைகளை இட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகின்றன.

கடலோர மணலில் இடப்படும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து குஞ்சுகள் பொரித்தவுடன் அதை மீண்டும் கடலில் விட்டு வருகின்றனர்.

இறந்து கரை ஒதுங்கின

இந்த நிலையில் மடவாமேடு, கூழையாறு, கொட்டாய்மேடு, தொடுவாய், திருமுல்லைவாசல் ஆகிய கடலோர கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. இந்த கிராமங்களில் கடந்த 15 நாட்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளதாகவும், இதனால் கடற்கரையில் துர்நாற்றம் வீசி வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.

ஆலிவர் ரெட்லி ஆமைகள் தொடர்ந்து இறந்து கரை ஒதுங்கி வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த ஆமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மீனவர்களின் நண்பன்

இதுகுறித்து கூழையாறு கிராமத்தை சேர்ந்த ஒன்றிய குழு உறுப்பினர் அங்குதன் கூறுகையில், ஆமைகளில் மிகவும் அபூர்வமாக வகையை சேர்ந்தது ஆலிவர் ரெட்லி ஆமைகள். இவை கடலில் உள்ள நல்ல மீன்களை உண்டு வாழும் சொரி மீன்களை தனக்கு இரையாக்கி கொள்வதால் மீனவர்களின் நண்பன் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆமைகள் எந்த இடத்தில் முட்டையிலிருந்து குஞ்சுகளாக வெளியே வருகிறதோ, அந்த இடத்திற்கு மீண்டும் 8 ஆண்டுகள் கழித்து வந்து தான் முட்டையிடுகின்றன. இத்தகைய அபூர்வமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் அழிந்தால் மீனவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பாதுகாக்க வேண்டும்

இத்தகைய ஆமைகள் சுவாசிப்பதற்கு 30 நிமிடத்துக்கு ஒரு முறை கடலின் மேற்பரப்புக்கு வரும். சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும் போது அவைகள் உயிரிழக்கின்றன. விசைப்படகுகள் மூலம் இழுவலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கி ஆமைகள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.விசை படகுகளில் அடிப்பட்டும் உயிரிழக்கின்றன. மீனவர்கள் ஆலிவர்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வேண்டும். அரியவகையாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் எதற்காக இறந்து கரை ஒதுங்குகிறது. பருவநிலை மாற்றத்தால் இறந்து கரை ஒதுங்குகிறதா? அல்லது கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகை அருகே நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் பதிக்கப்பட்டுள்ள குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. இதன் காரணமாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றனவா? என கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்