போலீசாரின் தடியடியில் காயம் அடைந்தவர்களுக்கு தமிழக அரசு உரிய சிகிச்சை வழங்க வேண்டும்; விஜயகாந்த் வேண்டுகோள்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

Update: 2017-01-16 17:45 GMT

சென்னை,

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு உரிய வகையில் நடைபெற வழிவகை காணப்படும் என மத்திய, மாநில அரசுகளை சார்ந்தவர்கள் தமிழக மக்களுக்கு தொடர்ந்து உறுதிமொழி அளித்து வந்தனர்.

பொங்கல் நாளிலும் அதற்கான அறிவிப்பு வராததால் இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் பாரம்பரிய முறைப்படி உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஆங்காங்கு தன்னிச்சையாக இந்த வீரவிளையாட்டில் ஈடுபட முயற்சித்தனர்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை கண்டறிந்து அங்கு முன்கூட்டியே 144 தடை உத்தரவு பிறப்பித்து காவல் துறையின் பாதுகாப்பை பலப்படுத்தியிருக்க வேண்டும். அதை செய்யாமல் விட்டுவிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயற்சித்தவர்கள் மீதும், கோவில்களில் காளைகளை வைத்து வழிபாடு நடத்தியவர்கள் மீதும் கண்மூடித்தனமாக போலீசார் தடியடி நடத்தியதாக தமிழகம் முழுவதும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதற்கான சூழ்நிலை உருவாகாதவாறு தடுக்காமல் இருந்த தமிழக அரசின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. போலீசாரின் தடியடியில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையினை தமிழக அரசு வழங்க வேண்டும் என தே.மு.தி.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்